மட்டக்களப்பில் மயிலத்தமடுமற்றும் மாதவனை பகுதியைச் சேர்ந்த கால்நடை பண்ணையாளர்கள் கடந்த 5 நாட்களாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
தங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தருமாறு கோரியே பண்ணையாளர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ”கடந்த ஐந்து நாட்களாக வாழ்வாதாரத்தை இழந்து நாம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எனினும் எமது போராட்டம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் பிரதேச செயலாளர்களும் அக்கரையற்ற நிலையிலேயே உள்ளனர்” என கவலை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்,மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் சமாசம்,மண்முனை தென் மேற்கு கால்நடை கூட்டுறவு சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இதே வேளை குறித்த போராட்டமானது தற்போது வலுவடைந்துவரும் நிலையில் அதில் கலந்துகொண்டவர்கள் கறுப்பு துணியை அணிந்துகொண்டு கைகளைக்கோர்த்த நிலையில் மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதன்போது” அரசே மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை வழங்கு, காணிக்கொள்ளையர்களே மேய்ச்சல்தரையினை விற்றுவிட்டீர்களா?,அரசே மகாவலி என்னும் போர்வையில் எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே,மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரே மேய்ச்சல் தரை பிரச்சினை விளங்கவில்லையா?” போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.