”வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாவது”வவுனியா பல்கலைக்கழகத்தில் வள பற்றாக்குறை அதிகமாக காணப்படுகின்றது. அதனை தீர்த்து வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதே வேளை வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை வவுனியா வாழ் மக்களுக்கு வேதனை அளிக்கும் விடயமாக உள்ளது.
சிங்கள மொழியிலும் ஆங்கில மொழியிலும் மாத்திரமே வரவேற்புப் பலகையில் இடம் பெற்றிருந்தது. இது தமிழ் மக்கள் மத்தியில் மன வேதனையாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருந்தது. அமைச்சருடைய கவனத்திற்கு இதை கொண்டு வருகின்றேன். இது போல் இனிவரும் காலங்களில் நடைபெறாது பார்த்துக் கொள்ள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த உயர் கல்வி அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா,வள பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பில் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இவ்வாறு நடைபெறாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.