யாழ் முழுவதும் ஒருவருட கால முடிவுத் திகதியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ள ஜூஸ் பக்கெட்களை அழிக்குமாறு, மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள ஜூஸ் உற்பத்தி நிலையம் ஒன்றில் குழந்தைகள் பருகும் ஒரு சில வாரங்களே காலவதித் திகதி இடக்கூடிய ஜூஸ் பக்கெற்றுகள், ஒரு வருட காலப்பகுதி குறிப்பிட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளமை அண்மையில் தெரியவந்துள்ளது.
இதன்போது அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகை ஜூஸ் பக்கெற்றுகளும் பொதுசுகாதார பரிசோதகரினால் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (21) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.
இதன்போது ”குறித்த ஜுஸ் பக்கெற்றுகளால் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் மாத்திரமின்றி நீண்ட காலத்தின் பின் புற்றுநோய் போன்ற நோய்களும் ஏற்படும் அபாய நிலை காணப்படுகிறது” என பொதுசுகாதார பரிசோதகரினால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து , மன்று அனைத்து ஜூஸ் பக்கெற்றுகளையும் அழிக்க உத்தரவு பிறப்பித்ததுடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்ட சகல ஜூஸ் பக்கெற்களையும் மீளபெற்று அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.