சீனாவில் இடம்பெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவருக்கான கிரிக்கெட் தொடரில் நேபாள அணியின் வீரர் திபேந்திரா சிங் 9 பந்துகளில் அரை சதம் கடந்து சாதனை படைத்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவருக்கான கிரிக்கெட் தொடரில் நேற்றயதினம் மொங்கோலியாவிற்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் நேபாளம் அணி 273 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக 9 பந்துகளை எதிர்கொண்ட திபேந்திரா சிங் 8 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அதிவேக அரை சதத்தை எட்டினார்.
இதன்மூலம் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனையை திபேந்திரா சிங் தன்வசப்படுத்தியுள்ளார்.
அத்துடன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை குவித்த அணி என்ற சாதனையையும் நேபாளம் அணி பெற்றுள்ளது.
இதேநேரம் தமது இன்னிங்ஸில் மொத்தம் 26 சிக்ஸர்களை அடித்து, ஒரே இன்னிங்ஸில் ஒரு அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற சாதனையும் நேபாளம் அணி தன்வசப்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மங்கோலியா அணி 13.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 41 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கெதிராக ஆப்கானிஸ்தான் அணி பெற்ற 278 என்ற ஓட்டமே அதிகூடிய ஓட்டமாக காணப்பட்டது இதனை நேபாளம் அணி முறியடித்துள்ளது.