இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்தி பயிற்சி மத்திய நிலையத்தில் சிங்கள மொழி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு மானிப்பாய் சுதுமலை பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று காலை சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” முதல் முறையாக எங்களுடைய நாட்டின் சரித்திரத்தில் நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக அதுவும் தான் செய்த ஒரு தீர்ப்பின் அடிப்படையிலே வந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாக நாட்டை விட்டு ஓடியதாக இன்றைய பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
இது நீதித்துறைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல். நாட்டிலே இருக்கின்ற சுயாதீனமான நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டிய பாரிய கடைப்பாடு எங்கள் அனைவருக்கும் உள்ளது. அத்தகைய சுயாதீனமான நிறுவனங்களிலே பிரதானமானது நீதி துறை. நீதித்துறையை பாதுகாக்கின்ற போது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் செய்வதை நாங்கள் கண்டிக்க வேண்டும். அதனைத் தடுக்க வேண்டும். அதே வேளையிலே நீதித்துறைக்கு உள்ளேயே தவறுகள் இருந்தால் அதனை திருத்துகின்ற வகையிலே நாங்கள் செயல்பட வேண்டும்.
நீதித்துறையை பாதுகாப்பது என்றால் நீதிபதிகள் என்ன செய்தாலும் அவர்களை பாதுகாப்பதல்ல. நீதிபதிகள் சுயாதீனமாக செயற்படுவதை பாதுகாப்பது ஆகும். அரசியல் என்பது அரசியல்வாதிகளின் கைகளில் விட்டு விடுவதற்கான இலகுவான விடையம் அல்ல, அரசியல் என்பது மக்களுடைய ஆணையை, மக்களுடைய விருப்பத்தை தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாக செயற்படுத்துகின்ற ஒன்று. அது மக்களுக்காக இயங்குகின்ற ஒன்றாக இருக்க வேண்டும். மக்கள் அதில் தொடர்ந்து ஈடுபடுகின்றவர்களாக இருந்தே ஆக வேண்டும்.
தமிழ் மாணவர்கள் சிங்களம் கற்பதிலும் , சிங்கள மாணவர்கள் தமிழ் கற்பதிலுமே அவர்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது. இதுவும் அரசியலிலே ஒரு முற்போக்கான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற விடயமாக உள்ளது” இவ்வாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார்.