நசீர் அகமட்டின் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்ட அலி சாஹிர் மௌலானா இன்று சபாநாயகர் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில், இன்று நாடாளுமன்றம் காலை 9 மணிக்கு கூடியது.
இதனையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹீர் மௌலானா சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
இவருக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிரணி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்டவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்டதையடுத்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார்.
இதுதொடர்பாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், இவரை நீக்க எடுத்த தீர்மானமானது சரியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் இல்லாமல் போன நிலையிலேயே, இவரது பதவி வெற்றிடத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அலி சாஹிர் மௌலானா முஸ்லிம் காங்கிரஸினால் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் தேர்தல் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.