கிளிநொச்சியைச் சேர்ந்த நபரொருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த ‘பாலசிங்கம் யுகதீபன்‘ என்ற, ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி ரஸ்யா சென்றுள்ளார் எனவும் அங்கிருந்து 7 பேர் கொண்ட குழுவுடன் பெலராஸ், போலந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக முயற்சித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெலராஸ் எல்லையில் வைத்து தனது உறவினர்களுடன் இது குறித்துத் தெரியப்படுதியுள்ளார் எனவும், இதன்போது ”தன்னை குறித்த குழுவினர் எல்லையில் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர் என்றும், யாரேனும் காப்பாற்றினால் அன்றி உயிர் தப்ப வேறு வழியில்லை” என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே அவரது சடலம் பெலாரஸ் எல்லையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த மேலிதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.