கட்சித் தலைவர்கள் உடனான விசேட கலந்தரையாடலை புறக்கணிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று புதன்கிழமை நாடாளுமன்றம் கூடியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கலப்பு தேர்தல் முறைமையை உருவாக்குவது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவரத்தன தலைமையில் இன்று குறித்த கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மக்கள் ஆணையை தற்போதைய அரசாங்கம் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளது என பிரதமர் தினேஷ் குணவரத்தன தெரிவித்திருந்தார்.
அமைச்சரவையின் கோரிக்கையின் பேரில் இடம்பெறும் இந்த கூட்டத்திற்கு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த அவர் இன்றைய கூட்டத்தின் முடிவுகளை அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த எதிர்கட்சித் தலைவர், முதலில் தேர்தலை நடத்துங்கள் அதன் பிறகு தேர்தல் சீர்திருத்தங்களுக்கு செல்லலாம் என கூறியிருந்தார்.
தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருகிறோம் என்ற போர்வையில் அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.