கென்யாவில் பெண்கள் மாத்திரமே வாழ்ந்து வரும் கிராமம் ஒன்று உள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நைரோபியில் இருந்து சுமார் 350 கிலோமீற்றர் தொலைவில் உள்ள உமோஜா என்ற கிராமத்திலேயே இவ்வாறு பெண்கள் மாத்திரம் வாழ்ந்து வருகின்றனர். குறித்த கிராமத்தில் ஆண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு வாழக்கூடிய பெண்கள் அனைவரும் சம்பூர் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இங்கு 40 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கிராமம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவான நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் சம்பூர் இனத்தை சேர்ந்த பெண்களைப் பிரித்தானிய இராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் எனவும் இதனால் அப் பெண்களின் கணவர்கள் அவர்களை ஏற்க மறுத்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஆவேசம் அடைந்த ஒரு பெண் 15 பெண்களை இணைத்துக் கொண்டு குறித்த கிராமத்தை உருவாக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.