மின்சார கட்டணத்தை 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதோடு ஓராண்டில் மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் மின்சார அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பது தொடர்பில் இன்று அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படவுள்ளது.
update……
மின்சார கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
13 நிபந்தனைகளின் அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேநேரம் திருத்தப்பட்ட கட்டணங்கள் அடுத்த வருடம் ஜூன் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில் 0 முதல் 30 யுனிட்டுகளுக்கு இடையில் பயன்படுத்தும் பயனர்களுக்கு நிலையான கட்டணம் 150 ரூபாயில் இருந்து 180 ரூபாயாகவும் 31 முதல் 60 யுனிட்டுகள் பயன்படுத்துவோருக்கு 300 ரூபாயில் இருந்து 360 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாதாந்தம் 61 முதல் 90 யுனிட்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 41 ரூபாய் என்ற அடிப்படையில் 480 ரூபாய் அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
91 முதல் 120 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டுக்கு 59 ரூபாய் விகிதம்1,180 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம் மாதத்திற்கு 121 முதல் 180 யூனிட்களை பயன்படுத்துவோருக்கு 1,770 ரூபாயாகவும் 180 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டுக்கு 89 ரூபாய் விகிதம் 2,360 ரூபாய் அறவிடப்படும் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல் துறை, அரச நிறுவனங்கள் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான மின் கட்டணத்தை இன்று முதல் அதிகரிக்கவும் இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.