2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட்களினால் வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
தர்மசாலாவில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக டேரில் மிட்செல் 130 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக மொஹமட் சமி 5 விக்கெட்களையும் குல்தீப் ஜாதவ் 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.
இதனை தொடர்ந்து 274 ஓட்டங்கள் வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இந்திய அணி சார்பாக விராட் கோலி 95 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க நியூசிலாந்து அணி சார்பாக லொக்கி பெர்குசன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தையும் நியூசிலாந்து அணி 8 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.