2009 மே மாதம் 18 ஆம் திகதி சரணடைந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு 58 ஆவது படைப்பிரிவுக்குக் கட்டளையிட வேண்டும் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.
இராணுவத்தின் 58, 59 ஆம் மற்றும் 53 ஆம் படைப்பிரிவுகளின் கட்டளைத் தளபதிகள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் தாம் சிரத்தையுடன் செயற்படுவதை நிரூபிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது.
யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் இது குறித்து அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கமானது சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தை உரியவாறு கையாள்வதாகப் பாசாங்கு காட்டுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் விசாரணைகளை மேற்கொள்வதற்கென அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியையோ அல்லது ஆறுதலையோ பெற்றுத்தரவில்லை என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.