ரயில் சேவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந்த குழுவில் ரயில்வே திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர்கள் இருவர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ரயில் சேவை ஒரு திணைக்களமாகக் காணப்படுவதால், தீர்மானங்களை மேற்கொள்வதில் அதிகக் காலம் செலவிடப்படுவதாகவும் ரயில்வே திணைக்களம் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுவதைக் கருத்திற்கொண்டு, அதனை அதிகார சபையாக மாற்றுவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
இதற்கமைய, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.