இலங்கை கிரிக்கெட் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
ஐ.சி.சி. தலைவர் தனியார் விமானத்தில் வருகைத் தந்து, ஜனாதிபதி மற்றும் சாகல ரத்னாயக்கவை சந்தித்துள்ளார்.
இதன்போது, இலங்கை கிரிக்கெட் சபைக்கு உள்ள அநாவசிய அழுத்தங்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார் என எமக்கு தெரியவந்துள்ளது.
அவரைப் பொறுத்தவரை இலங்கைக் கிரிக்கெட் சபையை பாதுகாக்க வேண்டும்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெற சிறிது காலத்திற்கு முன்னர் எதற்காக எல்.பி.எல். போட்டியை நடத்த வேண்டும்.
இதனால்தான் சிறந்த வீரர்கள் காயமடைந்தார்கள். உலகக் கிண்ண தொடரிலும் இவர்களால் விளையாட முடியாமல் போனது.
ஐ.சி.சி.யின் தலைவர்தான் எல்.பி.எல். போட்டியை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெற சிறிது காலத்திற்கு முன்பாக நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் சபைக்கு பணித்தாரோ தெரியவில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.