ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கொள்முதல் திட்டத்திற்கு உட்பட்டே இடம்பெற்றதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா கோப் குழுவில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் நேற்று கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தொடர்பாக அவர்களிடம் பிரதானமாக கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தத் தொடரின்போது செலவிடப்பட்ட நிதி குறித்து கணக்காய்வாளர் நாயகம் கேள்வி எழுப்பியிருந்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதல் இன்றி குறித்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதா? எனவும் கோப் குழுவின் அதிகாரிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அத்தோடு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை ஈட்டிய இலாபத்தில் வீரர்களுக்கு செலுத்தப்பட்ட தொகை உள்ளிட்ட விபரங்கள் தொடர்பாகவும் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த கிரிக்கெட் சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஹேஸ்லி டி சில்வா, குறித்த நிதியின் 25 வீதம் தேசிய கிரிக்கெட் அணிக்காக செலவிடப்படுவதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கருத்துரைத்த இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, அரசாங்கத்திடம் இருந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை எனவும் சகல நிதியும் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இருந்தே கிடைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதன்படி, தனியார் நிறுவனம் ஒன்றை போன்றே ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் செலவீனங்கள் இடம்பெறுவதாகவும் ஷம்மி சில்வா குறிப்பிட்டுள்ளார்.