நியூசிலாந்தை 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா அணி தகுதி பெற்றுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 04 விக்கெட் இழப்புக்கு 397 ஓட்டங்களைப் பெற்றது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 117 ஓட்டங்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் 105 ஓட்டங்களையும் சுப்மன் கில் 80 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு பங்களித்தனர். பந்துவீச்சில் டிம் சவுத்தி 03 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அதன்படி, 398 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு களம் இறங்கிய நியூசிலாந்து அணியால் 48 ஓவர்கள் 5 பந்துகளில் 327 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. அதன்படி இந்திய அணி 70 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
நியூசிலாந்து அணி சார்பில் டெரில் மிட்செல் 134 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 69 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் ஷமி 7 விக்கெட்டுக்களையும், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.




















