வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பதால் பொதுமக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது நாடு இருக்கும் நிலவரத்திற்கு இம்முறை வரவு செலவுத் திட்டமானது சிறந்த வரவு செலவுத் திட்டம் என்றே நாங்கள் கருதுகின்றோம்.
இன்னும் கொஞ்சம் காலத்தில் இந்த நாடு கட்டியெழுப்பப்படும் என்று எதிர்க்கட்சிகளுக்கு தெரியும்.
அவ்வாறு நாடு சிறந்த நிலைக்கு கொண்டு வரப்பட்டால் அவர்களால் அரசியல் நடத்த முடியாது.
ஆகவே தான் வரவு செலவுத் திட்டம் குறித்து முரணான கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
தற்போது முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் இன்றி மாற்று வேலைத்திட்டங்களை யாராவது முன்வைத்திருக்கின்றார்களா?
இவ்வாறு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை விமர்சித்து தடுப்பதன் மூலம் அப்பாவி பொதுமக்களே பாதிக்கப்படுவார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.