கிரிக்கெட் தொடர்பாக சிலர் கதைத்து, தங்களின் அரசியல் இலாபத்தை தேட சிலர் முற்படுவதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று கிரிக்கெட் தொடர்பாக சிலர் கதைத்து, தங்களின் அரசியல் இலாபத்தை தேட முற்படுகிறார்கள்.
கிரிக்கெட் மைதானத்தில் புற்களை வெட்டும் நபருக்கும் நீர் தெளிக்கும் நபருக்கும்கூட இன்று சம்பளத்தை வழங்க முடியாமல் உள்ளது இந்த ஐ.சி.சி. தடையினால்.
கடந்த காலத்திலும் இடைக்கால நிர்வாகக் குழுவை நியமிக்க, நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது முயற்சித்தேன்.
ஆனால், அப்படி செய்தால் தடை விதிக்கப்பட்டுவிடும் என்ற காரணத்தினால் ஐ.சி.சி.யுடன் சுமார் 8 தடவைகள் நாம் அன்று பேச்சு நடத்தினோம்.
நாம் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுடன் முரண்படவில்லை. இலங்கை கிரிக்கெட் சபையின் கலாசாரம் மாற்றப்படத்தான் வேண்டும்.
எனினும், நீதிமன்றத்தின் ஊடாகவே இந்த மாற்றங்களை செய்ய வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் ஜெய் ஷாவுடன் தொலைபேசியில் உரையாற்றினார்.
ஏனெனில், இது இன்று இராஜதந்திர பிரச்சினையாக மாறியுள்ளது. ஜெய் ஷாவின் தந்தை தான் அமித்ஷா.
அமித் ஷா தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வலது கையாக இருப்பவர்.
இதனால், அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரச்சினைக்கு அப்பால் இது தற்போது சென்று விட்டது.
ஐ.சி.சி. இலங்கை கிரிக்கெட் அணிக்கு தடை விதித்தமை தொடர்பாக நாடாளுமன்றம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கிரிக்கெட் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமானால் நாம் அதனை செய்வோம்.
அதற்கு முதல் இந்தத் தடையை இல்லாது செய்துக் கொள்வோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.