மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு நான்காவது நாளாக இன்றும் சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. வழக்கம் போல அதிகாலை 2.30 மணிக்கு பள்ளி உணர்த்தல் , 3 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், 3.05 மணிக்கு அபிஷேகம், 3.30 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து காலை 3.30 மணி முதல் 7 மணி வரையிலும் நெய்யபிஷேகம், 7.30 மணிக்கு உஷ பூஜை, 8 மணி முதல் 11.30 மணி வரை நெய்யபிஷேகம் 12 மணிக்கு கலச அபிஷேகம் 12.30 மணிக்கு உச்ச பூஜை, தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மேலும் மாலை 4 மணிக்கு நடை திறக்கபபட்டு 6.30 மணிக்கு தீபாராதனை, 6.45 மணிக்கு புஷ்பாபிஷேகம் , இரவு 9.30 மணிக்கு அத்தாழ பூஜை, 10.50 மணிக்கு ஹரிவராசனம் பாடலுடன் 11 மணிக்கு நடை அடைக்கப்படும். கார்த்திகை நான்காவது நாளாக இன்றும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
கடந்த 16 ஆம் திகதி மாலை நடை திறக்கப்பட்டு நேற்று வரை மண்டல காலம் மூன்று நாட்களுக்கு இதுவரை 1,61,789 பேர் தரிசனத்திற்கு வந்துள்ளனர். வனப்பாதை புல்மேடு வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தி உள்ளன.
நேற்று முதல் திறக்கப்பட்ட வனப் பாதையில் வன விலங்குகள் தொல்லையோ, பிற புகார்களோ இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் : வனபாதையில் 50 அதிகாரிகளை நியமித்து வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.