விரைவான பொருளாதார வளர்ச்சியுடன், அடுத்த வருடத்தில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாக அமையும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்குப் போதிய பணம் இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் விரைவான பொருளாதார வளர்ச்சியுடன், தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.
ஜனாதிபதியின் அரசியல் தலைமையின் கீழ் தேர்தல் ஆணைக்குழு உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தும்.
மேலும், டொலரின் பெறுமதி அதிகரிப்புடன், நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்த போதிலும், தற்போது அந்நிலைமை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் நியாயமற்ற முறையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பது குறித்தும், டொலரின் பெறுமதி குறைவடைந்ததன் பலன் மக்களுக்கு கிடைக்கின்றதா என்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அத்துடன், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மாத்திரமன்றி, அந்த நிவாரணங்களை எவ்வாறு வழங்குவது என்பதை எடுத்துக் காட்டிய இம்முறை வரவு செலவுத் திட்டம், நிச்சயம் அதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.