எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டு சபையில், சர்ச்சையில் ஈடுபட்டனர்.
இதன்போது தனது எதிர்ப்பினைத் தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, எதிர்க்கட்சித் தலைவரின் பைலை பறித்து எடுத்தார்.
இதில் முக்கியமான ஆவணங்கள் இருந்தன. இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளை பார்வையிட்டு சபாநாயகர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இது அவமரியாதைக்குரிய செயற்பாடாகும். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அஜித் மானப்பெருமவுக்கு நீங்கள் அவ்வேளையிலேயே தான் தண்டனை வழங்கினீர்கள்.
இந்த சம்பிரதாயத்தை போன்று, இந்த விடயத்திலும் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, ஆளும் தரப்பு உறுப்பினர்கள் தான் சபைக்கு நடுவே வந்து குழப்பினார்கள்.
இதற்கு நீங்களும் சாட்சியாளர். எனவே, ஒரு தரப்புக்கு சார்பாக மட்டும் செயற்பட வேண்டாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.