” பூகோள அரசியலுக்கு நான் எதிரானவன் அல்ல” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வரவு – செலவுத் திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முன்மொழிவின் வாத விவாதங்களில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”என்னுடைய அரசியல் என்பது எமது மக்கள் சார்ந்த நலன்களை முன்வைத்ததே அன்றி சுயலாபத்தினை முன்வைத்ததல்ல.
அந்த வகையில் எமது மக்களுக்கு நல்லெண்ணத்துடன் உதவ எந்தவொரு நாடும் முன்வருகையில் அதற்கே நான் முதலிடம் கோடுப்பேனேயன்றி சுயலாபம் கருதிய பூகோள அரசியலுக்கு அல்ல என்பதையே நான் வழமையாகக் கூறிவருகின்றேன்.
இதனையும் திரிபுபடுத்திய சிலர் ‘பூகோள அரசியலுக்கு நான் எதிரானவன்‘ என்ற ரீதியில் கருத்து தெரிவித்து வருகின்றனர். எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய அண்டைய நாடுகளின் பாதுகாப்பு என்ற வகையில் அவை தொடர்பில் மிக அதீதமான அக்கறை எனக்குண்டு.
இவை பூகோள அமைப்பு சார்ந்தவை தொடர்பில் முக்கியமானவை. இந்த அமைப்பில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நானும் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தபூகோள அமைப்பில் பாதிப்புக்கள் ஏற்படாதவகையில் எனக்குக் கிடைத்திருக்கின்ற அமைச்சின் பணிகளை முன்னெடுப்பதிலும் நான் எப்போதும் அவதானமாகவே இருக்கின்றேன். அதற்காக, பூகோள அரசியல் சொல்வதையெல்லாம் கேட்கவோ, செய்யவோவேண்டும் என்பது பொருளல்ல.
அந்த அரசியலானது எமது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாமல் வெறுமனே இருந்தாலும் நல்லது, அல்லது, பாதிப்புகளை ஏற்படுத்தாமல் உதவினாலும் நல்லது என்பதே எனது நிலைப்பாடாகும். பொருளாதார ரீதியில் நலிவடைந்திருந்த நாம் நாடு இன்று மெல்லென நிமிர்ந்து வருகிறது. தாகமெடுத்த கொக்குக்கு தாம்பாளத்தில் தண்ணீர் வழங்காமல் கூசாக்களில் நீர் இறைத்து தாகம் தீர்க்க எந்த நாடு வந்தாலும் நாம் அதை வரவேற்போம்.
ஆனாலும், எமது தேசம், எமது மக்கள், எமது உரிமை, எமது மீள் எழுச்சி, எமது நாடு, எமது இறமை, எமது அயலுலகம்,..இவைகளை எம் நெஞ்சில் நிறுத்தியே சர்வதேச உறவுகளை நாம் இன்னமும் கொண்டிருக்கிறோம்” இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.