கொழும்பு கோட்டைக்கும் நானுஓயாவிற்கும் இடையில் இன்று இரவு இரண்டு விசேட பயணிகள் புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று முதல் மறு அறிவித்தல்வரை பதுளை வரை இயங்கும் அனைத்து புகையிரத சேவைகளும் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்திருந்தது.
இதற்கமைவாக கொழும்பில் இருந்து நானு ஓயா வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள புகையிரத சேவைக்கு பதிலாக இன்று இரவு இரண்டு புகையிரத சேவை பயணத்தை முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக இன்று இரவு கோட்டையிலிருந்து நானுஓயாவிற்கும், நானுஓயாவிலிருந்து கோட்டைக்கும் இடையில் இரண்டு விசேட பயணிகள் புகையிரத சேவையை முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பாதையில் புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
பதுளை மற்றும் கொழும்பிற்கும் கொழும்பு மற்றும் பதுளைக்கும் இடையிலான இரண்டு இரவு அஞ்சல் புகையிரதங்களுக்குப் பதிலாக குறித்த இரண்டு விசேட பயணிகள் புகையிரதங்களும் இயக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக இரண்டு மின்சார புகையிரதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடிதங்கள் மற்றும் பொதிகள் எடுத்துச் செல்லப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விசேட புகையிரத சேவையானது கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கும் நானுஓயா புகையிரத நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கும் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.