காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு வழங்குவது எதிர்கால பொருளாதாரத்திற்காக செய்யப்படும் ஜனநாயக ரீதியிலான முதலீடாகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
2024 ஆம் வரவு – செலவுத்திட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையில் தமது வேலைத்திட்டங்களை ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார்.
அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் காரணமாக 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 73.70 வீதமாக அதிகரித்த பணவீக்கத்தை தற்போது, ஒற்றை இலக்கமாகக் குறைக்க முடிந்துள்ளது.
இதன் ஊடாக பணவீக்கத்தின் தாக்கத்தில் இருந்து நாட்டை மீட்க முடிந்தது.
கடந்த வருடங்களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு அரச வருமான இழப்பே பிரதான காரணமாக அமைந்தது.
மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் இருப்பதற்காக அன்று நடைமுறைப்படுத்தப்பட்ட வரி விலக்குகள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கவும் அரச நிறுவனங்களின் செயற்திறனை அதிகரிக்கவும் அவற்றை டிஜிடல்மயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் இறக்குமதிகள் மூலம் எமது நாட்டுக்கு கிடைக்க வேண்டிய அந்நியச் செலாவணியை முழுமையாக பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இலங்கை சுங்கத்தில் இடம்பெறும் மோசடிகளை நிறுத்த அதன் செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்த அவசியமான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன” என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.