முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் மேலும் சில மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்று 4 ஆவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்றிருந்தது.
இதன்போது, மேலும், 3 மனித எச்சங்கள் முழுமையாகவும், 2 மனித எச்சங்கள் பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வு பணியானது இன்று 5 நாளாகவும் இடம்பெற்று வருவதுடன், இதன்போது விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் இந்த மனித புதைகுழியானது எவ்வளவு ஆழமானது என்று சோதனை நடைபெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை நேற்று காலை முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக நேற்று மாலை 3 மணியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இன்று காலை 9 மணியளவில் மீண்டும் அங்கு அகழ்வு பணிகள் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.