அரசியமைப்புப் பேரவையின் மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் வகையில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தைக் கடுமையாகக் கண்டிப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது.
இதன் மூலம் மக்களின் ஆணையின்றி ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் ஒருவரின் எதேச்சதிகாரப்போக்கு படிப்படியாக மேலோங்கி வருவதை அவதானிக்க முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் அரசியலமைப்புப்பேரவை மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நாடாளுமன்றத்தில் கடந்த 23 ஆம் திகதி உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்புப் பேரவையானது நிறைவேற்றதிகாரத்தின்கீழ் வருவதாகக் கூறியதன் மூலம் அப்பேரவையின் நோக்கத்தை முற்றுமுழுதாகத் தவறாகப் பிரதிபலித்துள்ளார்.
ஜனாதிபதியினால் பகிரங்கமாக வெளியிடப்பட்ட மிகமோசமானதும், ஆபத்தானதுமான இக்கருத்து ஆட்சி நிர்வாகம் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் விதமாக அரசியலமைப்பின் ஊடாக நிறுவப்பட்ட கட்டமைப்பை வலுவிழக்கச்செய்கின்றது.
நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் நோக்கில் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புக்கான 18 ஆம் மற்றும் 20 ஆம் திருத்தங்களின் கீழ் அரசியலமைப்புப் பேரவை நீக்கப்பட்டது.
மீண்டும் அப்பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையகாலங்களில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் வெளியிடப்பட்ட கருத்துக்கள் உரிய எல்லைக்கோட்டைக் கடந்துள்ளன.
அதுமாத்திரமன்றி அரசியலமைப்புப்பேரவையினால் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமித்திருப்பதானது, ஜனாதிபதியின் பரிந்துரைகளை ஏற்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு அரசியலமைப்பின் ஊடாக ஆணை வழங்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்.
ஒரேயொரு நபரின் பெயரை மாத்திரம் பரிந்துரைத்து, அப்பெயர் அரசியலமைப்புப்பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்படாவிடின், ஜனாதிபதி அப்பதவிக்குப் பொருத்தமான வேறு நபர்களின் பெயர்களை முன்மொழியவேண்டும்.
அதனைவிடுத்து தான் முன்மொழிகின்ற ஒரேயொரு நபரின் பெயரை அரசியலமைப்புப் பேரவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ, அவ்வாறு ஏற்றுக்கொள்ளாவிடின் அரசியலமைப்புப்பேரவை உறுப்பினர்களை அச்சுறுத்துவதோ ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.
ஜனாதிபதியின் இந்த எதேச்சதிகாரப்போக்கு தொடருமாக இருந்தால், அது மீண்டுமொரு அரசியல் எழுச்சி ஏற்படுவதற்கும், பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைவதற்குமே வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது.