வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம் காணப்படுவதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார்.
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியானது 8 ஆவது நாளாக நேற்றைய தினம் இடம்பெற்றிருந்த நிலையில், அகழ்வுப் பணி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்” கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 39 மனித எச்சங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
நான்கு அடி, பதின்நான்கு அடி நீள அகலமுள்ள குழிகளில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருவதோடு அவற்றில் இருந்து தமிழீழ விடுதலை புலிகளின் உடலங்கள் என நம்பப்படும் மனித எலும்புகூட்டுத் தொகுதிகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனையில் வீதிக்கு மேற்கு பக்கமாக உள்ள வீதிக்குள் மனித எச்சங்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது
மேலும் குறித்த அகழ்வுப்பணியானது இரண்டாம் கட்டமாக தொடர்ச்சியாக எட்டு வாரங்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.
நாளையுடன் இந்த முதலாம் கட்டம் நிறுத்தப்படலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகின்றது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.