2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் 21 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 20 ஆயிரத்து 576 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்ப குதியில், 715 கிலோ 509 கிராம் ஹெரோயின் கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் அதன் பெறுமதி 17 ஆயிரத்து 887 மில்லியன் ரூபாயாகும் என கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, 3 ஆயிரத்து 641 கிலோ 15 கிராம் கேரள கஞ்சாவும், 50 கிலோ 288 கிராம் உள்ளூர் கஞ்சாவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி ஆயிரத்து 456 மில்லியன் ரூபாய் என கடற்படை தெரிவித்துள்ளது.
அதேநேரம், 10 கிலோகிராம் 755 கிராம் ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 95 மில்லியன் ரூபாயாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஆயிரத்து 127 மில்லியன் ரூபாய் பெறுமதியான 140 கிலோகிராம் 993 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருட்களுடன் 14 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் பாகிஸ்தான் பிரஜைகள் எனவும், 6 பேர் ஈரானிய பிரஜைகள் எனவும், மற்றைய 6 பேர் இந்திய பிரஜைகள் எனவும் கடற்படை கூறியுள்ளது.
இதற்கிடையில், இந்த வருடத்தில் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் வாகனங்களில் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டவர்களுக்கு சொந்தமான 3 படகுகளும், உள்நாட்டவர்களுக்குச் சொந்தமான 43 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.