எல் நினோ காலநிலை நிகழ்வால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சோமாலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கடுமையான மழை ஆபிரிக்காவின் தீபகற்பம் முழுவதும் பரவலான அழிவு, இடப்பெயர்வு மற்றும் மரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
COP28 உச்சிமாநாட்டில் காலநிலை நெருக்கடி குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் டுபாயில் ஒன்றுகூடிய நிலையில் இது வந்துள்ளது.
சோமாலியா, கென்யா மற்றும் தெற்கு எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் குறைந்த பட்சம் 270 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமாலியாவில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
முழு நகரங்களும் நீரில் மூழ்கியுள்ளன, ஏறக்குறைய அவர்களின் முழு மக்களையும் வேறு இடங்களில் அடைக்கலம் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜனாதிபதி ஹசன் ஷேக் மொஹமட், நாடு மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளான எத்தியோப்பியா மற்றும் கென்யாவும் பரவலான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கனமழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளதால் நிலைமை மேலும் மோசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலைமை பிராந்தியத்தில் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை அதிகரிக்கிறது என்று உலக உணவுத் திட்டம் கூறுகிறது. நோய் பரவுமோ என்ற அச்சமும் உள்ளது.