இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தென்னாபிரிக்கா அணி விபரத்தை தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை வழிநடத்திய டெம்பா பவுமா, நீக்கப்பட்டு ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களின் தலைவராக ஹெய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், பவுமா டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, முன்னணி வேகப் பந்துவீச்சாளர் கங்கிசோ ரபாடாவுக்கு ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டுள்ள போதும், டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23 வயது விக்கெட் காப்பு சகலதுறை வீரர் டிரைஸ்டன் ஸ்டப்ஸ் டெஸ்ட் அணியில் அறிமுக வீரராக இடம்பிடித்துள்ளார். யான்சென், கோட்ஸீ, என்ஜிடி ஆகியோர் முதல் இரண்டு ரி-20 போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளனர்.
மேலும் அறிமுக வீரர்களாக ஓட்னியேல் பார்ட்மேன், நாண்ட்ரே பர்கர், மிஹ்லலி மபோங்வானா ஆகியோருக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுதவிர, நட்சத்திர வீரர்களான டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்ஸி, ஜெரால்ட் கோட்ஸி ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ஹெய்டன் மர்க்ரம் தலைமையிலான அணியில், ஒட்னியல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, அண்டில் பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் லிசாட் வில்லியம்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ஹெய்டன் மர்க்ரம் தலைமையிலான அணியில், ஒட்னியேல் பார்ட்மேன், நான்ட்ரே பர்கர், டோனி டி ஸோர்ஸி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், மிஹ்லலி மபோங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், அண்டில் பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்ஸி, ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரைன் மற்றும் லிசாட் வில்லியம்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
டெம்பா பவுமா தலைமையிலான அணியில், டேவிட் பெடிங்ஹாம், நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஸோர்ஸி, டீன் எல்கர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, கீகன் பீட்டர்சன், கங்கிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் கைல் வெர்ரைன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர்களில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாவதாக நடைபெறும் இரு அணிகளுக்கிடையிலான ரி-20 தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 10ஆம் திகதி டர்பனில் நடைபெறவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி 17ஆம் திகதி ஜோகனஸ்பர்க்கிலும், முதல் டெஸ்ட் போட்டி 30ஆம் திகதி செஞ்சூரியனிலும் நடைபெறவுள்ளது.