பழைய பொருளாதார முறைகளை தொடர்ந்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதை தடுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதில் அரச அதிகாரிகளும், முழு நாட்டு மக்களும் பெரும் தியாகங்களைச் செய்தனர்.
அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இம்மாத நடுப்பகுதியில், நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிக்க உள்ளது.
ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த புதிய பொருளாதார முறைகளின்படி முன்னேற வேண்டும்.
அப்படி இல்லாமல், பழைய பொருளாதார முறைகளை அமுல்படுத்தினால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதை தடுக்க முடியாது.
மத்திய வங்கி ஏற்கனவே பணம் அச்சிடுவதை நிறுத்திவிட்டது. அபிவிருத்திக்காக அரச வங்கிகளில் இருந்து கடன் பெறுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிபந்தனைகள் இல்லாமல் பொருளாதார முன்னேற்த்தை எட்ட முடியாது.
இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளி மற்றும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும், அரசின் செலவினங்களை குறைக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் புதிய திட்டங்களை தயாரித்துள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.