ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில், முழு குதிரைப்படை மற்றும் வாகன அணிவகுப்புடன் ரஷ்ய ஜனாதிபதி வரவேற்கப்பட்டார்.
அதேநேரத்தில், ரஷ்யக் கொடி வர்ணத்தில் தேசிய வான்வழி அக்ரோபாட்டிக்ஸ் விமானக் குழு, ரஷ்யாவை கௌரவப்படுத்தியது.
இதன்போது, ரஷ்யாவின் ஜனாதிபதி, ஐக்கிய அரபு அமீரகத் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானிடம், ‘எங்கள் உறவுகள் முன்னோடியில்லாத அளவை எட்டியுள்ளன’ என்று கூறினார். கிரெம்ளின் அறிக்கை ‘அரபு உலகில் ரஷ்யாவின் முக்கிய பொருளாதார பங்காளி’ என்று கூறியது.
ரஷ்ய ஜனாதிபதி பின்னர் சவூதி அரேபியாவுக்குச் சென்று, ஆட்சியாளரான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானைச் சந்தித்தார். இதன்போது, புடின் பட்டத்து இளவரசரை ரஷ்யாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அத்துடன், எங்கள் நட்பு உறவுகளின் வளர்ச்சியை எதுவும் தடுக்க முடியாது என்று அவர் கூறினார். தற்போதைய பிராந்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் மற்றும் மதிப்பீடுகளைப் பரிமாறிக் கொள்வது முக்கியமானது என கூறினார்.
இருதரப்பு ஒத்துழைப்பு மத்திய கிழக்கில் பல பதற்றங்களை அகற்ற உதவியது என்று பட்டத்து இளவரசர் கூறினார்.
புடினுக்கும் வளைகுடா நாட்டின் நடைமுறை ஆட்சியாளருக்கும் இடையிலான சந்திப்பில், ரஷ்யாவின் செச்சென் குடியரசின் தலைவர் ரம்ஜான் கதிரோவ், கலந்துகொண்டார்.
கூட்டத்திற்கு முன்னதாக, இரண்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் விரிவாக்கத்தை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பரிசீலிப்பார்கள் என்றும் சிரியா, யேமன் மற்றும் சூடான் மோதல்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் விவாதிக்கப்படும் என்றும் கிரெம்ளின் அறிவித்தது.
ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ், புடினும் பட்டத்து இளவரசரும் ஓபெக் பிளஸ் ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததை ரஷ்ய அரசாங்க செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.
காசாவில் நடக்கும் போர் குறித்து விவாதிக்க புடின், இன்று (வியாழக்கிழமை) ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை சந்திக்கவுள்ளதாக கிரெம்ளின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பெப்ரவரி 2022இல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து புடின், உக்ரைன், ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.