இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும், மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுவதற்காக, மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதில் தற்போது, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், 2-1 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி, தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக, எதிர்வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் முதல் போட்டி, டிசம்பர் 12ஆம் திகதி பார்படோஸில் நடைபெறுகின்றது.
இந்தநிலையில், இந்தத் தொடருக்கான 15பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்த அணியில், கடந்த 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடிய ஆந்ரே ரஸ்ஸல், இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ரி-20 உலகக் கிண்ணத் தொடரில், விளையாடுவதற்காக தன்னை தயார் படுத்திக்கொள்ளும் வகையில், அவருக்கு இந்த வாய்ப்பு வழிவகை செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் அறிமுகமான இளம் சகலதுறை வீரர் மேத்யூ ஃபோர்ட், ரி-20 அணியில் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகிய மூவரும் ஒருநாள் தொடரை தவறவிட்ட பிறகு ரி-20 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக ரி-20 போட்டிகளில் விளையாடாத ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டையும் தேர்வுக்குழு திரும்ப அழைத்துள்ளது. ஒருநாள் போட்டித் தலைவர் ஷாய் ஹோப், ரோவ்மேன் பவலின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோவ்மேன் பவல் தலைமையிலான அணியில், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹோசைன், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆந்ரே ரஸ்ஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.