சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு நாட்காட்டியின் பிரகாரம், இலங்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முதல் மீளாய்வு இன்று, நிறைவேற்று சபையில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் கோரிக்கை உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து சர்வதேச நாணய நிதியம் இன்று தமது தீர்மானத்தை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ கடன் வழங்கும் நாடுகள் அண்மையில் வழங்கிய உறுதியை அடுத்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாம் தவணைக் கொடுப்பனவை இந்த மாத இறுதிக்குள் இலங்கை எட்டும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் சிலவற்றை மாத்திரமே இலங்கை பூர்த்தி செய்துள்ளதுடன், பல மாற்றங்களை இலங்கை கோரியிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், அதிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தது.
இதனபடிப்படையில், அதன் முதற் தவணை கடன் கடந்த மார்ச் மாதம் கிடைக்கப்பெற்றதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தவணைக்கடன் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகள் சிலவற்றை இலங்கை நிறைவேற்ற தவறியமையால், குறிப்பிட்ட காலத்தில், நீடிக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாம் தவணையை பெற இலங்கை தவறியிருந்தது.
இலங்கைக்கான இரண்டாம் கட்ட தவணைக்கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியம் இந்த மாதம் அனுமதி வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.