“மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 632 குடும்பங்களைச் சேர்ந்த 2245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்துள்ளார்.
இன்று (18) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதால் தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
மன்னாரி தற்போது 4 தற்காலிக நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேவன் பிட்டி கிராமத்தில் 3 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 131 குடும்பங்களைச் சேர்ந்த 438 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அம் மக்களுக்கு அப்பகுதிகளில் உள்ள இராணுவம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன” இவ்வாறு தெரிவித்துள்ளார்.