கடந்த இரண்டரை மாதங்களாக நிலவும் அதிக மழைவீழ்ச்சியை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மின் கட்டணத்தை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனவரி மாதத்தில் மின் கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
கடந்த ஒக்டோபர் மாத்தில் மின் உற்பத்திக்கான செலவுகள் அதிகளவில் காணப்பட்டமையால் மின் கட்டணம் அதிகரிப்பட்டது.
குறித்த அதிகரிப்பின் பின்னர் மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாத்தத்தில் மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளவே நாங்கள் தீர்மானித்தோம்.
இருப்பினும் கடந்த இரண்டரை மாதங்களாக நிலவும் அதிக மழைவீழ்ச்சி மற்றும் எதிர்வரும் இரண்டு வாரங்களும் அவ்வாறான காலநிலையே காணப்படும் என்பதால் மீண்டும் மின் கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு மின்சார சபை எமக்கு அறிவித்துள்ளது.
குறித்த மின் கட்டண திருத்தத்தின் போது அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைத்து மழைவீழ்ச்சியினால் கிடைக்கப்பெற்ற நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கின்றோம்.
ஆதற்கமைவாக புள்ளிவிபரங்களை பரிசீலித்ததன் பின்னர் ஜனவரி மாதத்திற்குள் மின் கட்டண திருத்தத்ததை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் படி ஜனவரி மாதத்தில் பொதுமக்களுக்கு மின் கட்டண நிவாரணம் ஒன்றை பெற்றுக்கொடுக்க முடியும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.