யாழ்ப்பாணம் குப்பிளானில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளானமை தொடர்பாக ஆராய கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளது.
விவசாய அமைச்சு மற்றும் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் உயரதிகாரிகள் குறித்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
உலக வங்கியின் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மானிய அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த 21 மெட்ரிக் தொன் உருளைக்கிழங்கு விதைகள் குப்பிளானில் அண்மையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.
அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குறித்த விதை உருளைக்கிழங்குகள் பெக்டோ பெக்டீரியம் கெரெட்டோபோரம் எனப்படும் பக்டீரியா தாக்கத்திற்குள்ளாமையினால் பழுதடைந்திருந்தமை தொடர்பில் கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி கண்டறியப்பட்டது.
குறித்த பக்டீரியா தாக்கத்தினால் 21 மெட்ரிக் தொன் விதை உருளைக்கிழங்குகளையும் பயன்படுத்த முடியாத நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்கு தொடர்பாக ஆராய கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று இன்று விஜயம் செய்து பார்வையிட்டனர்.
விவசாய அமைச்சின் விவசாயத் தொழில் நுட்ப பணிப்பாளரும் நவீனமயமாக்கல் திட்டம் பிரதிப்பணிப்பாளருமாகிய அனுர வியதுங்க, வடமாகாண விவசாய நவீன மாக்கல் திட்டத்தின் பிரதி மாகாண திட்டப்பணிப்பாளர் ஏ.விஜிதரன், விவசாய விஞ்ஞானி W.D.லெஸ்லி நவீன மயமாக்கல் திட்ட உள்ளக கணக்காய்வாளர் W.A.G.வீரசிங்க, யாழ்ப்பாண உருளைக்கிழங்கு நவீன மயாக்கல் திட்ட சங்கத்தின் தலைவர் S.துசியந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேசிய தாவர தடுப்பு காப்பு சேவையின் ஆலோசனையின் பின்னர் உருளைக்கிழங்கு விதைகள் தொடர்பாக முடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது.