நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4 ஆயிரத்து 432 குடும்பங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் மாத்திரம், 3 ஆயிரத்து 811 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊவா மாகணத்தில் 569 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 3 வீடுகள் முழுமையாகவும், 182 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்பதுடன், மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவிலான கன மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் உடுதும்பற பிரதேச செயலக பிரிவுக்கு 3 ஆம் நிலை சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, கண்டி, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மண்சரிவு அபாயம் காரணமாக லுணுகல, ஹோப்டன் தோட்ட பழைய தொழிற்சாலையின் டீ பிரிவில் வசிக்கும் 110 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் நேற்றிரவு வெளியேற்றப்பட்டதாகவும், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் லுணுகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.