”கடந்த 3 ஆண்டுகளில் மின்கட்டணம் செலுத்தாத 8 லட்சம் பேரின் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக”, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வாறு துண்டிக்கப்பட்ட இணைப்புகளில் பெரும்பாலானவை ஏழை மக்களின் இணைப்புகள் எனவும், இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான வசதிகளை வழங்குவதற்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை ஆகியவற்றின் பொறுப்பைக் கருத்தில் கொண்டு, சர்வதேச நாணய நிதியம் அவதானித்துள்ள நிர்ணய செலவுக்கு ஏற்ற விலையாக கட்டணத்தை மாற்ற வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.
இதன்படி, 05 முன்மொழிவுகளை உடனடியாக அமுல்படுத்துமாறு துறைசார் கண்காணிப்புக் குழு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரைத்துள்ளதாகவும், அவற்றுள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 03 மாத காலத்திற்கு மின் கண்டணத்தைக் குறைத்தல், தீவிர வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்ப அலகுகளுக்கு சிறப்பு நியாய விலை முறையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்டவை அடங்கும்” எனவும் தெரிவிக்கப்படுகின்றது.