இலங்கை கிரிக்கெட் சபைக்கு கிடைக்கும் வருமானம் வெளிப்படையாக கையாளப்படுகின்றது என இலங்கை கிரிக்கெட் சபையின் பதில் செயலாளர் கபுவத்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு- சினமன் கிராண்ட் நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட, நடைபெற்றுவரும் இலங்கை – சிம்பாப்வே தொடர் மற்றும் அணிக்கான அனுசரணையாளரை அறிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது, இலங்கை கிரிக்கெட் சபையின் பதில் செயலாளர் கபுவத்த, இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் தலைவர் குசல் மெண்டிஸ், ரி-20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க, நிப்போன் பெயின் நிறுவனத்தின் தலைமை முகாமையாளர் நேமந்த அபேசிங்க ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
இதன்போது, அரங்கத்தில் கூடியிருந்த ஊடகவியலாளர்களால் கேள்வி கேட்கப்பட்டது. இதில் அணியின் தேர்வு எவ்வாறு அமைகின்றது என அணியின் ஒருநாள் தலைவர் குசல் மெண்டிஸிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், தற்போது அணியுள்ள பல வீரர்கள் இன்னமும் இரு உலகக்கிண்ண தொடரில் விளையாடக் கூடிய உடற்தகுதியுடையவர்கள். ஆகையால், குறிப்பட்ட தொடருக்காக மட்டும் வீரர்களை தேர்வுசெய்து அவர்கள் மீது மட்டும் கவனம் செலுத்த முடியாது என ஒருநாள் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்தார்.
மேலும், போட்டியை கண்டு இரசிக்க வரும் இரசிகர்களாலும் தமக்கு பலன் உள்ளதாக குறிப்பிட்ட குசல், இங்கிலாந்து, அவுஸ்ரேலியா போன்ற மைதானங்களில் விளையாடும் போது இரசிகர்களால் தமக்கு வழங்கப்படும் ஆதரவு மற்றும் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாக உள்ளதாகவும் கூறினார்.
இதன்பிறகு இலங்கை கிரிக்கெட் சபையின் பதில் செயலாளர் கபுவத்தவிடம் கிரிக்கெட் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,
இலங்கை கிரிக்கெட் சபை இரு வழிகளில் வருமானம் கிடைக்கின்றது. அனுசரணையாளர்கள் மூலமும் ஐ.சி.சி.இனாலும் வருமானம் கிடைக்கின்றது. இதில் ஐ.சி.சி.யினால் கிடைக்கும் வருமான நிபந்தனைக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டது.
கிரிக்கெட் நிறுவனத்துக்கு கிடைக்கும் வருமானம் வெளிப்படையாக கையாளப்படுகின்றது. அதிலும் குறிப்பாக கிடைக்கும் வருமானம் பல சேவைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது. லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு உதவியளிக்கப்பட்டது. அத்துடன் கொவிட் காலங்களில் உதவிகள் வழங்கப்பட்டன.
இதனிடையே எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து மைதானங்களிலும் போட்டியை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ளவர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு மகிழலாம் எனவும் தெரிவித்தார்.