இம்முறை வடக்குக் கிழக்கில் பட்டிப் பொங்கல் ஒரு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.கிழக்கில் விவசாயிகள்,பெண்கள்,பண்ணையாளர்கள் அரசியல்வாதிகள், செயல்பாட்டாளர்கள் ஆகியோர் இணைந்து தலைகளில் பொங்கல் பானையை வைத்துக்கொண்டு ஊர்வலமாகப் போனார்கள். தமிழரசுக்ககட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கே காணப்பட்டார்கள். மேச்சல் தரையை சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில்; நாட்டு மாடுகள் சுட்டும் வெட்டியும் வெங்காய வெடி வைக்கும் கொல்லப்படும் ஒரு பின்னணியில்; நாட்டு மாடுகளை சுருக்குத் தடம் போட்டு பிடித்து செல்பவர்கள் யார் என்று தெரிந்திருந்தும் போலீசார் மற்றும் அரச அதிகாரிகள் அவர்களைத் தடுக்காத ஒரு பின்னணியில்; பட்டிப் பொங்கலை சந்தோஷமாகக் கொண்டாட முடியாது என்று கூறி கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் விவசாயிகளும் பண்ணையாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.
மேச்சல் தரையை மீட்பதற்கான போராட்டம் ஏற்கனவே 130 நாட்களைகக் கடந்துவிட்ட ஒரு பின்னணியில்; அண்மையில் பெருகிய மழை வெள்ளத்தில் போராட்டக்காரர்களின் கொட்டில் மிதக்கத் தொடங்கிவிட்டது. முழங்கால் அளவு நீரில் நின்றபடி போராடிய விவசாயிகள் பட்டிப் பொங்கலை ஒரு எதிர்ப்பு போராட்டமாக முன்னெடுத்திருக்கிறார்கள்.
கிழக்கு விவசாயிகளுக்கு ஆதரவாக வடக்கிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லை ஆதீனச் சூழலில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்களும் செயற்பாட்டாளர்களும் கூடி நின்று தமது எதிர்ப்பைக்காட்டினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள். வெவ்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த மதத் தலைவர்களும் அங்கு காணப்பட்டார்கள்.
இது நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்,பொங்கல் திருநாளை முன்னிட்டு கிழக்கில் பெருமெடுப்பில் ஒரு பண்பாட்டு விழா ஒழுங்கு செய்யப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகிய செந்தில் தொண்டமான் அப் பண்பாட்டுப் பெருவிழாவை ஒழுங்குபடுத்தியிருந்தார். படகோட்டப் போட்டி; ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவுதல் போட்டி போன்றவற்றை ஒழுங்கு படுத்தியிருந்தார். நூற்றுக் கணக்கில் பொங்கல் பானைகளை வைத்து பெருமெடுப்பில் மெகா பொங்கல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது.நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே மைதானத்தில் நடனம் ஆடினார்கள். திருமலையில் அண்மைய தசாப்தங்களில் அதுபோன்ற ஒரு பண்பாட்டு விழா அதற்கு முன் நடந்ததில்லை என்று கூறப்படுகின்றது. அதாவது அந்த அளவு பெரிய ஒரு பண்பாட்டு விழா அதற்கு முன் நடந்தது இல்லை என்று கூறப்படுகிறது.
கிழக்கில் சிங்கள பௌத்த மயமாக்கல் பெருமளவுக்கு வெற்றி பெற்றிருக்கும் ஒரு மாவட்டம் திருக்கோணமலை. அங்கே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் ஒளிப்படம் தாங்கிய வாகனத்தை எடுத்துச் சென்றபோது இடையில் தாக்கப்பட்டார்.அந்தளவுக்கு தமிழ் மக்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு மாவட்டத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமான் அப்படி ஒரு பிரம்மாண்டமான பொங்கல் விழாவை ஒழுங்குபடுத்தியது ஒரு பகுதி தமிழர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.
நமது பண்பாட்டைப் பாதுகாப்பதற்கு ஒரு ஆளுநர் வந்துவிட்டார் என்று அதை கொண்டாடியவர்கள் பலர் உண்டு.ஆனால் அவ்வாறு பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன் பெரும் எடுப்பில் ஒரு பண்பாட்டு விழா நடத்தப்பட்ட அதே மாகாணத்தில்தான், அதன் இன்னொரு பகுதியில் மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை அபகரிக்கப்படுகின்றது. அந்த மாவட்டத்தின் செல்வம் என்று வர்ணிக்கப்படும் நாட்டு மாடுகள் உணவின்றித் தவிக்கின்றன. சுருக்குத் தடம் போட்டு பிடிக்கப்படுகின்றன.அல்லது சுட்டும் வெட்டியும் கொல்லப்படுகின்றன. அல்லது வெங்காய வெடி என்ற வெடி வைத்து மாடுகளின் வாய் சிதைக்கப்படுகின்றது.இது தொடர்பான ஒளிப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறு கோமாதா என்று தமிழ் பண்பாட்டில் அழைக்கப்படும் மாடுகளையும் மேச்சல் நிலத்தையும் பாதுகாக்க முடியாத கிழக்கு மக்கள் பட்டிப் பொங்கலை ஒரு போராட்டமாக முன்னெடுத்தார்கள்.
அப்போராட்டம் வடக்கையும் கிழக்கையும் ஒப்பிட்டு அளவில் ஒருங்கிணைத்து வருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான போராட்டத்திற்கு பின் வடக்குக் கிழக்கும் இணைந்த ஒரு போராட்டமாக அது காணப்படுகின்றது. கிழக்கைப் போன்று வடக்கில் அது பேரெழுச்சியாக இருக்கவில்லைத்தான்.எனினும் மேச்சல் தரை விவகாரம் வடக்கையும் கிழக்கையும் இணைத்திருக்கின்றது.
சில கிழமைகளுக்கு முன்பு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அப்போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்புக்குச் சென்றார்கள். போராட்டத்தில் ஈடுபடும் பண்ணையாளர்களோடு அமர்ந்திருந்து தனது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார்கள்.போராட்டத்தில் ஈடுபட்ட பின் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வரும் வழியில் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். போராடப் போன மாணவர்களைக் கைது செய்த போலீஸ் அவர்களைத் தடுத்து வைத்திருந்தது.ஆனால் நிலத்தை அபகரிக்கும் விவசாயிகளில் யாரையும் போலீஸ் கைது பண்ணியதாகத் தெரியவில்லை. மாடுகளைப் பிடிப்பவர்களையும் கொல்பவர்களையும் போலீஸ் கைது பண்ணியதாகத் தெரியவில்லை. அந்த விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஆன்ம பலமாகவும் காணப்படும் பௌத்த மத குருக்களை போலீஸ் கைது செய்வதாகவும் தெரியவில்லை.
மேச்சல் தரையை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் தனியாக சட்டத்தை மீறிவரும் விவசாயிகளால் மட்டும் முன்னெடுக்கப்படவில்லை. இதில் திணைக்களங்கள்,அரசு அதிகாரிகள்,அரச படைகள்,போலீசார் போன்றவர்களின் மறைமுக ஒத்துழைப்பு உண்டு என்று பண்ணையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.அங்கு நீதிமன்றத்தின் உத்தரவுகள் வெளிப்படையாக மீறப்படுகின்றன. ஆனால் அதற்காக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதைத்தான் திருமலை மறை மாவட்ட ஆயர் ஒரே நாடு இரண்டு சட்டங்கள் என்று வர்ணித்தார்.
இப்படிப்பட்டதோர் பின்னணியில், கிழக்கில் பட்டிப்பொங்கலை ஒரு போராட்டமாக முன்னெடுத்தமை என்பது அங்கே ஆளுநரின் பண்பாட்டு பெருவிழாவை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.நாட்டு மாடுகளை பாதுகாக்க முடியாத ஓர் ஆளுநர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகிறார். தமிழ் பண்பாட்டில் அதிகம் மதிக்கப்படும் ஒரு வளர்ப்பு விலங்கு மாடுதான். தமிழ் மக்களின் வாழ்க்கையில் அது கோமாதா என்று அழைக்கப்படுகின்றது. அது வணங்கப்படுகின்றது. ஆனால் கிழக்கில் கோமாதாவுக்கு உணவும் இல்லை பாதுகாப்பும் இல்லை.மேய்ச்சல் தரைக்காகப் போராடத் தொடங்கிய பின் 124 நாட்களுக்குள் இதுவரை 252 மாடுகள் வரை கொல்லப்பட்டு விட்டதாக பண்ணையாளர்கள் கூறுகிறார்கள்.
அண்மையில் சாணக்கியன் தெரிவித்த ஒரு தகவலின்படி ஜனாதிபதி கேட்டாராம் ஏன் அந்த மாடுகளுக்கு புற்களை வேறு எங்கிருந்தாவது கொண்டு வந்து கொடுக்க முடியாதா என்று. இப்படித்தான் மேச்சல் தரை விவகாரத்தை ஒரு ஜனாதிபதி விளங்கி வைத்திருப்பார் என்றால்,இந்த விவகாரத்துக்கு இப்போதைக்கு தீர்வு கிடைக்காது என்று பொருள்.
அண்மையில் குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள போலீஸ் உயர் மட்டத்தோடு ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். அச்சந்திப்பு தமக்கு நம்பிக்கை ஊட்டுவதாக பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். சந்திப்பின் பின் திருப்பகரமான மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. போலீசார் இந்த விடயத்தில் அத்துமீறி வரும் சிங்கள விவசாயிகளின் பக்கம் நிற்பதாக தமிழ் விவசாயிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால் போலீஸ் உயரதிகாரிகள் அதை மறுக்கின்றார்கள். மேற்படி சந்திப்பின் போது, அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த விடயத்தில் ஏற்கனவே ஜனாதிபதி வாக்குறுதி வழங்கினார். எதுவும் நடக்கவில்லை. ஆளுநர் வாக்குறுதி வழங்கினார். எதுவும் நடக்கவில்லை. இப்பொழுது போலீசார் வாக்குறுதி வழங்கியிருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்
இதில் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவப் போட்டியும் பட்டிப் பொங்கலில் பிரதிபலித்தது.தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கான வேட்பாளர்களில் ஒருவராகிய சுமந்திரன் மட்டக்களப்பில் தலையில் பொங்கல் பானையை வைத்துக் கொண்டிருக்கக் காணப்பட்டார். மட்டக்களப்பில் சிறீதரனுக்கு ஆதரவு அதிகம் என்ற ஒரு கணக்கு முன் வைக்கப்படுகின்றது. இந்நிலையில் சுமந்திரன் அங்கே மேய்ச்சல் தரைக்கான போராட்டத்தில் முன்னிப்பதன் மூலம் தன்னுடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறார்.கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவ போட்டி அவரை அவ்வாறு தலையில் பானையோடு நடக்க வைத்திருந்தாலும் அது நல்லதே.
தேர்தலில் யாரும் வெல்லலாம்.73 வயதான தமிழரசுக் கட்சி தனக்கு உரிய தலைவர் யார் என்பதை ஒரு தேர்தல் மூலம் தெரிந்து எடுப்பது ஜனநாயகமானது. உள்ளதில் பெரிய கட்சி அது. நிகழக்கூடிய தலைமைத்துவ மாற்றம் கட்சியின் எதிர்காலப் போக்கைத் தீர்மானிக்குமா?.
ஆனால் யார் தலைவராக வந்தாலும், கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்பட்டது போல சமஸ்டியை அடைவதற்கான வழி எது என்பதனை தெளிவாக முன்வைக்க வேண்டும். அதேசமயம் உடனடிப் பிரச்சினைகளாக உள்ள நிலப் பறிப்பு,சிங்கள பௌத்த மயமாக்கல்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம்,அரசியல் கைதிகளுக்கான போராட்டம்…உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுக்குமாகாகப் போராடுவதற்கென்று உரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
மேச்சல் தரைக்கான ஒரு போராட்டம் ஊடகங்களின் குவி மையமாகக் காணப்படும் ஒரு காலகட்டத்தில், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சிக்குள் ஒரு தேர்தல் வந்திருக்கிறது.தேர்தலின் முடிவு, மேச்சல் தரைப் போராட்டமும் உள்ளிட்ட எல்லா போராட்டங்களுக்குமான அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பதாக அமையுமா? அல்லது,அடுத்த பட்டிப்பொங்கலும் ஒரு போராட்டமாகத்தான் அமையுமா?