பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் பாடசாலை மாணவர்களது கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், பாகல்பட்டி அரச பாடசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் நேற்றைய தினம் இலவச சைக்கிள் வழங்கும் விழாவொன்று இடம்பெற்றுள்ளது. இவ்விழாவில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது அங்கிருந்த பாகல்பட்டி தி.மு.க. கிளை செயலாளர் ராஜி, ‘எங்களை பேச அழைக்காமல் எப்படி சைக்கிள் வழங்கலாம்’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால், அருள் எம்.எல்.ஏ. தரப்பினருக்கும், தி.மு.க. கிளை செயலாளர் ராஜி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்படவே, திடீரென அங்கிருந்த மாணவர்களது கால்களில் விழுந்த எம்.எல். ஏ அருள், இரு கைகளையும் கூப்பி என்னை மன்னித்து விடுங்கள் என மன்னிப்பு கேட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில் அருளை உடன் இருந்த பா.ம.க.வினர் சமாதானம் செய்தனர்.
இந்நிலையில் இது குறித்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.