கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் மண்டபத்தில் ஒரு வெளியீட்டு விழா நடந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஈழத் தமிழராகிய ராஜ் ராஜரத்தினத்தின் “சமனற்ற நீதி” என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் அது.
ராஜ் ராஜரத்தினம் அமெரிக்காவில் துலங்கிக் கொண்டு மேலெழுந்த ஒரு பங்குச்சந்தை வர்த்தகர். உலகப் பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் நிற்கும் தமிழர்களில் ஒருவர். அவர் பங்குச்சந்தை வியாபாரத்தில் “இன்சைடர் ரேடிங் ” என்று ஆங்கிலத்தில் கூறப்படும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் தொடர்பான ரகசிய தகவல்களைக் கசியவிடுவதன் மூலம் லாபம் ஈட்டும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர். அவருடைய தண்டனைக் காலத்தின் போது சிறையில் இருந்து எழுதத் தொடங்கிய அந்த நூல் முதலில் ஆங்கிலத்திலும் இப்பொழுது தமிழிலும் வெளி வந்திருக்கிறது.
இந்த நூல் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. முதலாவது அது ஒரு தன் வரலாறு.இரண்டாவதாக, அது ஒரு சட்டப் பரிமாணத்தைக் கொண்ட நூல். மூன்றாவதாக, அது பங்குச்சந்தை வாணிபம் தொடர்பான தகவல்களைக் கொண்ட ஒரு நூல். நான்காவதாக, புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் எப்படிப்பட்ட உச்சங்களைத் தொட்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாகக் காணப்படும் ஒரு தமிழ் முதலீட்டாளரின் வாக்குமூலம் அது.
இப்பொழுது அந்த நூலைச் சற்று ஆழமாகப் பார்க்கலாம்.ராஜ் ராஜரத்தினத்தின் பூர்வீகம் வடமராட்சியில் உள்ள அல்வாய். அவருடைய தகப்பனின் தொழில் காரணமாக சிறுபிராயத்திலேயே குடும்பம் ஊருக்கு வெளியே பயணம் செய்யத் தொடங்குகின்றது. தன்னுடைய பட்டப்படிப்புகளை மேற்கில் தொடர்கிறார். மிக இளம் வயதிலேயே அமெரிக்க பங்குச் சந்தைக்குள் பிரகாசிக்கத் தொடங்குகிறார். உலகின் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய தமிழ் முதலீட்டாளர்களில் ஒருவராக வெற்றி பெறுகிறார்.
2000 ஆவது ஆண்டின் முதல் தசாப்தத்தின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா பொருளாதார மந்த நிலைக்குள் சிக்கியது. அந்த பொருளாதார நெருக்கடியின் போது ராஜ் கைது செய்யப்படுகிறார். அமெரிக்காவின் பொருளாதாரத் தோல்விகளுக்கு ஒரு பலியாட்டை முன் நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது என்றும், அதற்கு தன்னைப் போன்றவர்களை அவர்கள் கைது செய்து தண்டித்ததாகவும், ராஜ் குற்றம் சாட்டுகிறார்.
தன்னை கைது செய்த எஃப்.பி.ஐ அதிகாரிகளுக்கு பங்குச் சந்தை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றும், தன்னை விசாரித்தவர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை என்றும், தனது வழக்கறிஞர்களில் பெரும்பாலானவர்களுக்கு அது தெரிந்திருக்கவில்லை என்றும், தன்னைக் குற்றவாளியாகக் கண்ட ஜூரிகளுக்கும் அது தெரிந்திருக்கவில்லை என்றும், தன் மீது புனைவுகளை அவிழ்த்துவிட்ட அமெரிக்காவின் ஸ்தாபிக்கப்பட்ட ஊடகங்களுக்கும் அது பற்றித் தெரிந்திருக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
தன்னோடு கூட இருந்து லாபமடைந்தவர்களும், தன்னோடு நெருக்கமாகப் பழகியவர்களும் தனக்குத் துரோகம் செய்ததாக அந்த நூலில் அவர் விவரிக்கின்றார். அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு என்று ஒவ்வொரு அத்தியாயங்களை ஒதுக்கி, அவர்கள் மீது கடுமையான வார்த்தைகளில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்.
தன்னைக் காட்டிக் கொடுத்தவர்கள் மீது மட்டுமல்ல, அமெரிக்காவின் நீதிபரிபாலானக் கட்டமைப்பையும் அவர் மிகக் கூர்மையான வார்த்தைகளால் விமர்சிக்கின்றார். அந்த அடிப்படையில் இந்த நூல் அமெரிக்காவின் நீதிபதிபாலனக் கட்டமைப்பை, அதன் விசாரணைப் பொறிமுறையை, மிகக் கடுமையாக விமர்சிக்கும் ஒரு நூல் எனலாம். அப்படி ஒரு நூலை அமெரிக்கா எப்படி சகித்துக் கொள்கிறது? அப்படி ஒரு நூல் இலங்கையில் வெளியிடப்பட்டிருந்திருந்தால், அந்த நபர் நீதிமன்ற அவமதிப்பின் கீழே அல்லது வேறு குற்றச்சாட்டுகளின் பெயராலோ மீண்டும் கைது செய்யப்படக்கூடிய ஆபத்து உண்டு. ஆனால் அமெரிக்க ஜனநாயகத்தின் விரிவை அந்த நூல் காட்டுகிறது.
ஒருபுறம் அந்த நூல் அமெரிக்க நீதிபரிபாலான கட்டமைப்பின் மீதான மிகக் கூர்மையான கடும் வார்த்தைகளால் ஆன விமர்சனமாக காணப்படுகின்றது. இன்னொரு புறம்,அந்த நூல் அமெரிக்க ஜனநாயகத்தின் செழிப்பையும் நமக்குக் காட்டுகின்றது.
ராஜ் ராஜரத்தினம் கூறுகிறார், அமெரிக்க நீதி சமனற்றது என்று. அதற்கு அவர் ஆதாரங்களைத் தொகுத்துக் காட்டுகிறார். இன்சைடர் ட்ரேடிங் என்று அழைக்கப்படும் பங்குச் சந்தை உள் விவரங்களைக் கசிய விடுகின்ற, அல்லது உள் ஆட்களின் மூலம் பங்குச் சந்தை உள் விவரங்களை ரகசியமாக திரட்டுகின்ற நடவடிக்கைகள் அமெரிக்காவில் சட்டவிரோதமானவைகளாக இருந்த ஒரு காலகட்டத்தில் அவர் கைது செய்யப்படுகிறார். ஆனால் அதற்காக அமெரிக்கா கையாண்ட வழிமுறைகள் அநீதியானவை என்று அவர் கூறுகிறார். அதே குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்கள் சிலர் கைது செய்யப்படாததையும் அவர் தொகுத்து காட்டுகின்றார். தன்னைக் கைது செய்வதற்காக அமெரிக்க உள்ளகப் புலனாய்வுத் துறை ஆனது தன்னோடு சேர்ந்து வேலை செய்தவர்கள் அல்லது தனக்கு தெரிந்தவர்கள் போன்றவர்களை எவ்வாறு எனக்கு எதிரான சாட்சிகளாக மாற்றியது என்பதையும் அவர் கூறுகிறார். குற்றமழைத்தவர்களை அக்குற்றத்திலிருந்து விடுவிப்பது என்ற வாக்குறுதியின் பெயரில் அரசுதரப்பு சாட்சிகளாக மாற்றும் நடைமுறையை அவர் அம்பலப்படுத்துகின்றார். தனக்கு வழங்கப்பட்ட நீதி சமனற்றது என்பதனை அவர் அந்த நூல் முழுவதிலும் ஸ்தாபிக்கின்றார்.
ஒரு உலகப் பேரரசின் நிதியானது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரிவது போல புனிதமானது அல்ல என்று அவர் நிரூபிக்க முற்படுகின்றார். அது ராஜ்ஜுடைய தனிப்பட்ட அனுபவம். பேரரசுகளின் நீதி அல்லது உலக சமூகத்துக்கு ஜனநாயகத்தை, நீதியை அறத்தைப் போதிக்கும் மேற்கத்திய நாடுகளின் நீதியெனப்படுவது எப்படிப்பட்டது என்பதற்கு வரலாறு முழுவதிலும் உதாரணங்கள் உண்டு.
கிராம்சி கூறுவது போல மேற்கத்திய நாடுகள் தமது நாட்டின் பிரஜைகளுக்கு ஜனநாயகத்தை வழங்குகின்றன. ஆனால் தாங்கள் ஆக்கிரமித்த நாடுகளில் அவை அவ்வாறு நடந்து கொள்ளவில்லை,அல்லது ஆக்கிரமிப்புத் தேவைகளுக்காக அவை தாங்கள் போதிக்கும் ஜனநாயகம், நீதி, அரசியல் அறம் போன்ற எல்லாவற்றையும் தலைகீழாக வியாக்கியானம் செய்கின்றன.
உதாரணமாக ஈராக்கிற்குள் மேற்கு நாடுகள் படையெடுத்தபோது அங்கே மனித குலத்துக்குத் தீங்கான ஆயுதங்கள் இருப்பதாக குற்றம் சாட்டினர். ஆனால் அப்படிப்பட்ட ஆயுதங்கள் அவையும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அது தொடர்பான உட் தகவல்களை அதில் சம்பந்தப்பட்டவர்களே பின்னாளில் தங்கள் வாக்குமூலங்களின் மூலம் வெளிப்படுத்தினார்கள். ஆனால் ஈராக் சிதைக்கப்பட்டு விட்டது.ஆசியாவின் மிகச் செழிப்பான நாகரிகம் ஒன்று சிதைக்கப்பட்டு விட்டது.அதை சிதைப்பதற்காக கூறப்பட்ட காரணம் உண்மையற்றது.ஆதாரம் அற்றது. இதுதான் மேற்கு நாடுகளின் நீதி.
ஏன் அதிகம் போவான்?காசாவில் இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது? இஸ்ரேல் புரியும் இனப்படுகொலையை எல்லாம் மேற்கு நாடுகளும் மௌனமாக அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு எதிராக ஆப்பிரிக்க நாடாகிய தென்னாபிரிக்கா உலக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றது.உலக நீதிமன்றத்தை ஸ்தாபித்த பொழுது அமெரிக்காவும் பிரித்தானியாவும் பெரிய பங்களிப்பை நல்கின.ஆனால் தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் வழக்கிற்கு எந்த ஒரு மேற்கத்திய நாடும் உத்தியோகபூர்வமாக ஆதரவைக் காட்டவில்லை.
இங்கு மேலும் ஒரு உதாரணத்தைக் காட்டலாம். ரஷ்யா உக்ரேனுக்குள் இறங்கிய பொழுது, அதை மேற்கு நாடுகள் எதிர்த்தன. புட்டின் புரிவது இனப்படுகொலை என்று குற்றஞ்சாட்டும் அமெரிக்கா இஸ்ரேல் காசாவில் புரிவது இனப்படுகொலை என்று கூறத் தயார் இல்லை.எனவே இங்கே எது நீதி என்பதனை எது தீர்மானிக்கின்றது?
நிச்சயமாக அறநெறிகளோ நீதி நெறிகளோ அல்ல. அரசுகளின் உலகத்தில் தூய நீதி கிடையாது. அது ஈழத் தமிழர்களுக்கு முன்மொழியப்பட்ட நிலைமாறு கால நீதியாகட்டும் அல்லது ஈழத் தமிழர்கள் கேட்கின்ற பரிகார ரீதியாகட்டும், எதுவானாலும் அது அரசுகளின் நீதிதான். அதாவது அது ஒர் அரசியல் தீர்மானம். அரசுகள் தமது ராணுவ அரசியல் பொருளாதார நோக்கு நிலைகளில் இருந்து தீர்மானங்களை எடுக்கின்றன. நிச்சயமாக அறநெறிகளின் அடிப்படையில் அத் தீர்மானங்கள் எடுக்கப்படுவதில்லை.
ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் நேற்றோவின் நோக்குநிலையில் இருந்து எடுக்கப்படுகின்றது.அப்படித்தான் ரஷ்யா கிரீமியாவை ஆக்கிரமித்ததும் நீதியின் அடிப்படையில் அல்ல.அங்குள்ள ரஸ்ய மொழியைப் பேசும் மக்களை பாதுகாப்பதற்காக என்று கூறப்பட்டவை எல்லாம் பிரதான காரணங்கள் அல்ல. பிரதான காரணம் உக்ரைனைப் பலவீனப்படுத்துவது.
இந்தியா பங்களாதேஷை பிரித்தெடுத்தது. அது பங்களாதேஷின் மீது கொண்ட காதலால் அல்ல. பாகிஸ்தானை உடைக்க வேண்டும் என்ற பாதுகாப்பு நோக்கு நிலையில் இருந்து எடுக்கப்பட்ட முடிவு அது.
இங்கே பெரிய நாடு சிறிய நாடு என்ற வேறுபாடு இல்லை. அரசுகள் தங்களுடைய ராணுவ பொருளாதார அரசியல் நோக்குநிலைகளில் இருந்து நீதிகளை வழங்கி வருகின்றன. இப்பொழுது இனப்படுகொலைக்கு உள்ளாகும் பலஸ்தீனம் 2009இல் ஈழத் தமிழர்களின் பக்கம் நின்றதா? இல்லை. போராடி விடுதலை பெற்ற கியூபா ஈழத் தமிழர்களின் பக்கம் நிற்கின்றதா? இல்லை. 1980 களின் பிற்பகுதியில் பலஸ்தீன் அதிகார சபை உருவாக்கப்பட முன்னரான ஒரு காலகட்டத்தில் பலஸ்தீனம் ஈழத் தமிழர்களுக்கு பயிற்சி வழங்கியது. ஆனால் பலஸ்தீன் அதிகார சபை உருவாக்கப்பட்ட பின் அது மஹிந்த ராஜபக்சவுக்குத் தான் நட்பாகக் காணப்படுகின்றது. மஹிந்த ராஜபக்சவுக்கு 2014 ஆம் ஆண்டு அந்நாட்டின் உயர் விருது ஆகிய பலஸ்தீன நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது. அங்குள்ள வீதி ஒன்றுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது.இவை அனைத்தும் 2009 மே மாதத்துக்குப் பின் நிகழ்ந்தவை.
எனவே இப்பொழுது நமக்கு தெளிவான ஒரு சித்திரம் கிடைக்கின்றது. அரசுகளின் நீதி எத்தகையது என்று.
ஆனால் ஈழத் தமிழர்கள் அதே அரசுகளிடம்தான் நீதியைக் கேட்டுப் போராடுகிறார்கள். ஐநாவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானங்களைக் கொண்டு வரும் நாடுகள்தான் காசாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராகக் காணப்படுகின்றன. இங்கே யார் யாரை ஆதரிப்பது? எப்பொழுது ஆதரிப்பது? என்பவையெல்லாம் நீதியின் பாற்பட்டு முடிவெடுக்கப்படுவதில்லை. நலன்களின் பாற்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட அரசுகள் அல்லது பேரரசுகள் தனி மனிதர்களுக்கு மட்டும் நீதியை வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?
இப்படிப்பட்டதோர் உலக நீதியின் பின்னணியில், ராஜரத்தினம் எங்கே நமக்கு முக்கியமானவராகத் தெரிகிறார்? அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு அதை அவர் அனுபவித்த பின்னர்தான் வெளியே வந்திருகிறார்.ஆனால் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அந்த நூலை எழுதுகிறார்.
அது ஒரு உலகப் பேரரசின் நீதிக்கு எதிரான புத்தகம் மட்டுமல்ல, புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நிதி ரீதியாக உச்சத்தை தொட்ட ஒருவர் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார் என்பது இங்கு முக்கியம். இது புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் தாயகத்தில் வசிப்பவர்களுக்கும் ஒரு கூர்மையான செய்தியை வெளிப்படுத்துகின்றது.முதலாவது செய்தி, ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கடும் உழைப்பின் மூலம் எந்தளவுக்கு முன்னேறலாம் என்பது. இரண்டாவது செய்தி, நீதிக்காகப் போராடுவதற்கும் நிதிப் பலம் இருக்க வேண்டும் என்பது.
ராஜ் ஒரு கோடீஸ்வரனாக இருந்த காரணத்தால், தனக்கு வழங்கப்பட்ட நீதியை எதிர்த்துப் போராடினார்.அப்படித்தான் ஈழத் தமிழர்களும் நீதி கேட்டுப் போராடுவது என்று சொன்னால், பொருளாதார ரீதியாக தங்களை பலப்படுத்த வேண்டும்.அப்படிப்பட்ட பலம் இல்லாத காரணத்தால்தான் அண்மை மாதங்களாக தாயகத்தில் இருந்து மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் மக்களின் ஜனத்தொகை படிப்படியாகக் கரைந்து போகின்றது. எனவே தமிழ் மக்கள் நிதி ரீதியாகப் பலமானவர்களாக மாற வேண்டும்.புலம் பெயர்ந்த தரப்பில் இருக்கும் முதலீட்டாளர்கள் தாயகத்தில் முதலீடு செய்ய வேண்டும். அந்த முதலீடுகள் கொழும்பின் நோக்கு நிலையில் இருந்தன்றி, தமிழ் நோக்கு நிலையில் இருந்து, தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து, தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாக, முதலீடு என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
தேசத்தை நிர்மாணிக்கத் தேவையான கட்டமைப்புகளை புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் கட்டியெழுப்ப வேண்டும்.
சமனற்ற நீதி நூல் வெளியீட்டின் போது நான் ஆற்றிய உரையில் அதை யூதர்களின் தேசிய நிதியத்யோடு ஒப்பிட்டேன். முதலாவது சியோனிச மாநாடு 1897 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அதிலிருந்து 5 ஆண்டுகளில் அதாவது 1901 ஆம் ஆண்டு “ஜூவிஸ் நஷனல் ஃபண்ட்” என்று அழைக்கப்படும் யூத தேசிய நிதியம் உருவாக்கப்பட்டது. அந்த நிதியம் தான் இப்போதிருக்கும் இஸ்ரேலைக் கட்டி எழுப்பக் காரணம். அந்த நிதியத்தைப்கபயன்படுத்தி பலஸ்தீனர்களின் நிலங்கள் விலைக்கு வாங்கப்பட்டன.அங்கு கொமியூன்கள் என்று அழைக்கத்தக்க கூட்டுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன.அக்கூட்டுப் பண்ணைகளின் விரிவாக்கமே இஸ்ரேல் என்ற நாடு. இந்த விடயத்தில் யூதர்கள் பலஸ்தீன்களை ஏமாற்றினார்கள்;இனப்படுகொலை செய்தார்கள் என்பவையெல்லாம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.
இஸ்ரேலை ஒரு முன்னுதாரணமாகக் காட்டுவதன் மூலம் இக்கட்டுரையானது யூதர்கள் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதை நியாயப்படுத்தவில்லை.ஆனால் புலம்பெயர்ந்த சமூகம் ஒன்று தாயகத்தில் எவ்வாறு ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நிதி ரீதியாகப் பங்களிப்பை நல்க முடியும் என்பதற்கு அது ஒரு முன்னுதாரணம்.ராஜ் ராஜரட்னத்தைப் போன்ற புலம்பெயர்ந்த தமிழர்களை தேசத்தை நிர்மாணிப்பது ஏன்ற அடிப்படையில் எவ்வாறு தாயகத்தில் முதலீடு செய்ய வைப்பது என்று ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.ஏற்கனவே ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் வெவ்வேறு தொழில்துறைகளில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டார்கள்.இந்த முதலீடுகளை நெறிப்படுத்தக்கூடிய ஒரு கட்டமைப்பை ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களோடு இணைந்து உருவாக்க வேண்டும். எதையும் கட்டமைப்புக்குள்ளால் சிந்திக்க வேண்டும்.அரூபமாகச் சிந்திப்பதால் பயனில்லை. கற்பனைகளில் மிதப்பதால் பயனில்லை. செயலுக்குப் போக வேண்டும்.
நீதிமான்களிடம் தான் எழுத்தமிழர்கள் நீதியைக்கேட்கலாம் என்றால் அதற்கு ஒன்றில் யாகங்கள் செய்ய வேண்டும்,அல்லது பரலோக ராஜ்ஜியத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்.ஓர் ஆபிரிக்கப் பழமொழி கூறுவதுபோல…. “நீ நீதியாக இருக்கிறாய் என்பதற்காக உலகம் உன்னிடம் நீதியாக நடக்கும் என்று எதிர்பார்க்காதே. அப்படி எதிர்பார்ப்பது, நீ சிங்கத்தைச் சாப்பிட மாட்டாய் என்பதற்காக சிங்கம் உன்னைச் சாப்பிடாது என்று நம்புவதைப் போன்றது.