”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரம் இருக்கும்போது அந்நியனாகவும், அதிகாரம் இல்லாத போது அம்பியாகவும் மாறுவதாக” மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள ஹேமியோபதி வைத்தியசாலைக்கு தளபாடங்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” ஆட்சியில் இல்லாதபோது ஊடகங்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே, தற்போது இணையவழி பாதுகாப்பு சட்டத்தை நாட்டில் அமுல்படுத்தியுள்ளார்.
அன்று ஊடக அடக்குமுறையை எதிர்த்த ரணில் விக்கிரமசிங்க இன்று தனது ஆட்சியில் புதிய சட்டத்தின் மூலம் ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளார்” இவ்வாறு சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன்,கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் குருநாதன்,நாடாளுமன்ற உறுப்பினரின் மட்டக்களப்பு இணைப்பாளர் டினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.