சுகாதார தொழிற்சங்கங்களினால் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை, நாளை (சனிக்கிழமை) காலை 6.30 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை தமக்கு வழங்குமாறு கோரி, கடந்த 16 ஆம் திகதி சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன.
இதேவேளை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்ததையடுத்து இந்தப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்து.
இந்த நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்களுக்கும், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கும் இடையில் இன்று மதியம் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்னைத்தன.எனினும், இதற்கு உரிய தீர்வு வழங்கப்படாதமையினால், இணக்கப்பாடின்றி பேச்சுவார்த்தை நிறைவுக்கு வந்தது
எனினும் தங்களின் கோரிக்கைகளுக்கு உரியத் தீர்வு இல்லாவிட்டால் 7 ஆம் திகதி மீண்டும் போராட்டம் மேற்கொள்ளப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த இணைப்பாளர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.