இஸ்ரேல் ஹமாஸ் மோதலினால் காஸா மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் மற்றும் மின்சாரம் இன்றி பெரும்பாலான மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், முகாம்களில் வசித்துவரும் ஹோசம் அல் அட்டா எனும் 15 வயதான சிறுவன் ஒருவர் தன்னுடைய குடும்பம் மின்சாரம் இன்றி தவித்ததை பார்த்து தன்னால் முடிந்த வகையில் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார்.
கிடைக்கும் பொருட்களை வைத்தும் டைனமோ போன்ற கருவிகளை வைத்தும் காற்றாலை மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொண்டுள்ளார். அதன் பின்னர் தம்மை போன்று முகாம்களில் வசிக்கும் ஏனைய மக்களுக்கும் மின்சாரத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதனால் முகாம்களில் வசிக்கும் அம்மக்கள் இவரை பலஸ்தீனியன் நியூட்டன் என்று அழைக்கின்றனர்.
இது குறித்து அவர் தெரிவிக்கும்போது “எனது இரு தங்கைகளும் இருளில் உறங்குவதற்கு பயப்படுகின்றனர். என் தங்கைகள் போன்று இங்கு இருக்கும் பல சிறுவர்கள் போர் விமானங்களில் சத்தங்களினால் பயப்படுகின்றனர். அதனாலேயே என்னால் முடிந்தவற்றை செய்தேன். காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் 24 மணிநேரமும் எமக்கு இருக்கின்றது. இதனால் எங்கள் சிறுவர்கள் தற்போது சிறிதேனும் நிம்மதியாக இரவில் உறங்குகின்றனர்” என தெரிவித்துள்ளார்.