ஜேவிபியின் தூதுக்குழு ஒன்று புதுடெல்லிக்கு சென்று இருக்கின்றது. இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று உத்தியோகபூர்வமாக அக்குழு அங்கு சென்று இருக்கின்றது. அங்கே இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை ஆலோசகர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களையும் அத்தூதுக்குழு சந்தித்திருக்கின்றது.
அரசியலில் இது ஒரு தலைகீழ் மாற்றம் என்று வர்ணிக்கலாமா? ஜேவிபி ஓர் ஆயுதப் போராட்ட இயக்கமாக இருந்தபோது அதன் ஐந்து வகுப்புகளில் ஐந்தாவது வகுப்பு இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிரானது. ஜேவிபி இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாக மலையக மக்களை பார்த்தது. மேலும் ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டத்தை நசுக்கியதில் இந்தியப் படைகளுக்கும் பங்களிப்பு உண்டு. அதுபோல ஜேவிபியின் இரண்டாவது ஆயுத போராட்டத்தை பொறுத்தவரையிலும், அதை நசுக்குவதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்திய அமைதி காக்கும் படையினர் பங்களிப்பு செலுத்தினார்கள். எப்படி என்றால் ஜேவிபியின் இரண்டாவது ஆயுதப் போராட்டம் எனப்படுவது இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிரானது. அதாவது இந்தியாவுக்கு எதிரானது. இந்நிலையில் ஜேவிபியை விடவும் அதிக இந்திய எதிர்ப்பை கையில் எடுத்த பிரேமதாச இந்திய அமைதி காக்கும் படையை வெளியே போகுமாறு உத்தரவிட்டார். அதற்கு அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒத்துழைப்பையும் பெற்றார். அவ்வாறு இந்திய அமைதி காக்கும் படை வெளியேற்றப்பட்ட பின் பிரேமதாச ஜேவிபியை மிகக் கொடூரமாக வேட்டையாடினார்.
இப்பொழுது ஜேவிபி ஒரு மிதவாதக் கட்சி. எனினும் கடந்த 2022 ஆம் ஆண்டு நிகழ்ந்த அரகலய என்று அழைக்கப்படுகின்ற சிங்கள மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களின் போது ஜேவிபியின் செல்வாக்குக்கு உட்பட்ட மாணவ அமைப்புகள் பின்னணியில் நின்றன. அரகலய போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தின் போது இந்தியாவுக்கு எதிரான சுலோகங்களையும் காட்சிப்படுத்தினார்கள். குறிப்பாக இந்தியாவின் அதானி குழுமம் ராஜபக்சக்களின் ஒத்துழைப்போடு இலங்கையில் முதலீடு செய்வதற்கு எதிராக அச் சுலோகம் காணப்பட்டது. அதில் இந்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக என்ற வார்த்தை காணப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை ஜேவிபி இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டோடு தான் காணப்பட்டது. அதன் ஆயுதப் போராட்டங்களிலும் அதுதான் நிலைமை. அது சம்பந்தப்பட்ட ஆயுதம் இல்லாத மக்கள் எழுச்சியின் போதும் அதுதான் நிலைமை.
அவ்வாறு தொடர்ச்சியாக இந்திய எதிர்ப்பை முன்னெடுத்த ஒரு கட்சியின் தூதுக்குழுவை தலைநகருக்கு வருமாறு இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்திருக்கின்றது. ஏன்?
அரகலய போராட்டத்தின் பின்னர் ஜேவிபியின் தலைவரை அமெரிக்க தூதுவரும் உட்பட சில ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் ஏற்கனவே சந்தித்திருக்கிறார்கள். இப்பொழுது இந்தியா அவர்களை உத்தியோகபூர்வமாக அழைத்திருக்கின்றது.
ஏனெனில் ஜேவிபியானது அண்மை ஆண்டுகளில் குறிப்பாக அரகலயவின் பின் சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் செல்வாக்கு பெற்ற ஒரு கட்சியாக வளர்ந்து வருவதே காரணம். தென் இலங்கையில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளின்படி ஜேவிபிக்கு மக்கள் ஆதரவு அதிகரிப்பது தெரிகிறது. இக் கருத்துக் கணிப்புகள் முழுமையான திருத்தமானவயா என்ற கேள்விகள் உண்டு. எனினும் ஜேவிபியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்பது மட்டும் வெளிப்படையானது. ஆனால் இந்த ஆதரவு மிகைப்படுத்திக் காட்டப்படுகிறது என்றும் தென்னிலங்கையில் உள்ள சில தொழிற்சங்கவாதிகள் கூறுவது உண்டு. தனது பலத்தைக் குறித்து ஜேவிபி மிகைப்படுத்தி சிந்திக்கின்றது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இதுதான் அக்கட்சி எதிர்க்கட்சிகளோடு இணைந்த ஒரு கூட்டை உருவாக்க முடியாமலிருப்பதற்குக் காரணம் என்றும் கருதப்படுகின்றது.
லண்டனை மையமாகக் கொண்ட ஒரு தமிழ் அரசியல் விமர்சகர் ஜேவிபியின் ஆதரவு வளர்ந்திருக்கிறதா என்ற கேள்விக்கு கூறிய பதிலை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். பாம்பாட்டிக்கு வெள்ளி திசை வந்தால், அவன் மேலும் இரு நாகக் குட்டிகளை வாங்கி வைத்துக் கொள்வான். அதற்கு மப்பால் அவன் அரசனாகப் போவதில்லை என்று. அப்படித்தான் ஜெவிபியின் வளர்ச்சி என்பது மிஞ்சி மிஞ்சிப் போனால் 15 விகித வாக்குகளைத் தான் பெற முடியும் என்றும் ஒரு கருத்து உண்டு.ஜேவிபியின் மிதவாத அரசியல் எழுச்சிக் காலம் எனப்படுவது விடுதலைப்புலிகள் கோலோச்சிய ஒரு காலகட்டம் தான். அக்கால கட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விட்டுக் கொடுப்பற்ற இனவாதத்தை ஜேவிபி முன்னெடுத்தது. அதன் விளைவாக இனவாதத்தின் கூர் முனைகளில் ஒன்றாக அது காணப்பட்டது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ எல்லா இனவாதிகளை விடவும் பெரிய இனவாதியாக எழுச்சி பெற்று விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்தபொழுது, ஜேவிபியின் அரசியல் அடித்தளம் பலவீனமடைந்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டபொழுது ஜேவிபியும் ஏறக்குறைய தோற்கடிக்கப்பட்டது என்று திருநாவுக்கரசு கூறுவார்.
எனினும்,2022ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது ஜேவிபியின் செல்வாக்கை மேலும் வளத்தெடுத்தது.தென்னிலங்கையில் தோன்றியிருக்கும் தலைமைத்துவ வெற்றிடம் ஜேவிபியின் கவர்ச்சியை அதிகப்படுத்தியது. அனுரகுமாரவின் தலைமைத்துவத்தை நோக்கிய எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன.படைதரப்பின் மத்தியிலும் ஓய்வு பெற்ற படைத்தரப்பின் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழ் மக்கள் மத்தியில் ஜேவிபியை நோக்கிய எதிர்பார்ப்பு அந்தளவுக்கு இல்லை.
ஏனெனில் இனப்பிரச்சினை தொடர்பாக ஜேவிபி இன்றுவரையிலும் தமிழ் மக்களுக்குத் திருப்தியூட்டும் தீர்வு எதையும் முன்வைக்கவில்லை. தென்னிலங்கையில் உள்ள சிங்களக் கடும்போக்கு வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் தயாரில்லை.அதைவிட முக்கியமாக,இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் ஒரு வழக்கின் மூலம் பிரித்தது ஜேவிபி தான்.அது தொடர்பாக ஜேவிபி இன்று வரையிலும் வருத்தம் தெரிவிக்கவில்லை.அதுமட்டுமல்ல தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டையும் சுயநிர்ணய உரிமையையும் ஜேவிபி ஏற்றுக்கொள்ளவில்லை.
இப்படிப்பட்டதோர் பின்னணியில், இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கைப் பிரித்த ஒரு கட்சியை இந்தியா டெல்லிக்கு அழைத்திருக்கின்றது. அதே சமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவை தலையிடுமாறு கோரி பல மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு கடிதம் எழுதிய தமிழ் கட்சிகளுக்கு இன்றுவரை இந்தியாவிடம் இருந்து அழைப்பு கிடைக்கவில்லை.கடிதம் எழுதிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. இக்காலப் பகுதிக்குள் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் வந்த இந்திய பிரமுகர்கள் யாரும் குறிப்பிட்ட 6 கட்சிகளையும் ஒன்றாக அழைத்துப் பேசியதாகத் தெரியவில்லை. அந்த ஆறு கட்சிகளுக்குள் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான கட்சிகள் உண்டு. குறிப்பாக ஆயுதப் போராட்டம் நிகழ்ந்த காலகட்டத்தில் இந்திய அமைதிகாக்கும் படையோடு இணைந்து செயல்பட்ட, இந்தியாவின் மாகாண சபையை ஆபத்துக்களின் மத்தியிலும் துணிந்து கையில் எடுத்த கட்சிகள் அதில் உண்டு.
தமிழ்த் தேசியப்பரப்பில் 13வது திருத்தம் குறித்த பரவலான எதிர்ப்பின் பின்னணியில், மேற்படி கட்சிகள் இந்தியாவை நோக்கி அப்படி ஒரு கூட்டுக் கடிதத்தை எழுதின.ஆனால் அக்கடிதத்தை மதித்து அல்லது பொருட்படுத்தி இந்திய அரச உயர் மட்டும் இன்று வரையிலும் அக்கட்சிகளோடு உத்தியோகபூர்வமாக சந்திப்புகளை ஒழுங்குபடுத்தவில்லை.கூட்டமைப்பு என்ற அடிப்படையில் அல்லது பொதுவாக தமிழ் கட்சிகள் என்ற அடிப்படையில் சில சந்திப்புகள் நிகழ்ந்தன. ஆனால் கடிதம் எழுதிய கட்சிகளைச் சந்தித்தல் என்ற அடிப்படையில் அதாவது கடிதத்திற்கு பதில் கூறுவது என்ற அடிப்படையில் சந்திப்பெதுவும் இன்றுவரை நடக்கவில்லை.
ஆனால் தொடக்கத்திலிருந்தே இந்திய எதிர்ப்பை அதன் அரசியல் கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டிருந்த ஒரு கட்சி அதிலும் குறிப்பாக, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இந்திய எதிர்ப்பை அதன் சுலோகங்களில் ஒன்றாகக் கொண்டிருந்த ஒரு கட்சியை, இந்தியா புது டெல்லிக்கு அழைத்திருக்கிறது. இது எதை காட்டுகின்றது?
ஜேவிபி தன்னை ஒரு வலு மையமாகக் கட்டி எழுப்பி வருவதுதான் பிரதான காரணம்.அது ஒரு பலமான சக்தி என்று மேற்கு நாடுகளும் இந்தியாவும் நம்புகின்றன.அதன் பலத்தை அவர்கள் எந்தளவுக்கு மதிப்பிட்டு வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.ஆனால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பின்னர் நடக்கக்கூடிய தேர்தல்களிலும் ஜேவிபி சில சமயம் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக வளரலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.
மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை தென்னிலங்கையில் மக்கள் எழுச்சிகளின் பின்னணியில் நிற்கக்கூடிய ஜேவிபியோடு பேச வேண்டிய தேவை உண்டு. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை வேறு ஒரு விசேஷ காரணமும் இருக்கலாம்.
இந்தியா ரணில் விக்கிரமசிங்கவை அதிகம் ஆர்வத்தோடு பார்க்கவில்லை என்பது வெளிப்படையானது.அவர் கெட்டிக்காரன்.தந்திரசாலி.எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைக்கக் கூடியவர்.அது இந்தியாவுக்குப் பாதகமானது.இந்தியா தன்னை நோக்கி நெருக்கி வரக்கூடிய பலவீனமான ஒரு தலைவரை ஆட்சிக்கு கொண்டுவர விரும்பக் கூடும் என்பதனை கடந்த ஆண்டு தமிழ் கட்சிகளிடம் டளஸ் அழகப்பெருமாவை ஆதரிக்குமாறு இந்தியா கேட்ட பொழுது ஊகிக்கக்கூடியதாக இருந்தது.எனவே இந்தியா இப்பொழுதும் அதே நிலைப்பாட்டோடு இருந்தால்,ரணிலுக்கு எதிராக எழுச்சி பெறக்கூடிய சக்திகளை அல்லது ரணிலுக்கு எதிராக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கூட்டுக்களுக்குள் இணையக்கூடிய தரப்புகளை அழைத்துப் பேச வேண்டிய ஒரு தேவை; கையாள வேண்டிய ஒரு தேவை இந்தியாவுக்கு உண்டு.அந்த அடிப்படையில் இந்தியா ஜேவிபியை உத்தியோகபூர்வமாக அழைத்திருக்கலாம்.
ஆனால் இந்தியா தங்களை உத்தியோகபூர்வமாக அழைக்கவில்லை என்று கருதும் தமிழ் கட்சிகள் இதில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், தங்களை ஒரு வலு மையமாக அவர்கள் கட்டியெழுப்பினால் எல்லாப் பேரரசுகளும் அவர்களை நோக்கி வரும் என்பதுதான். தமிழ்க் கட்சிகள் ஒன்றில் தேர்தல் மூலம் மக்களானையைப் பெற்று தங்களை பலமான வலு மையங்களாகக் கட்டியெழுப்ப வேண்டும். அல்லது மக்கள் போராட்டங்களுக்கு தலைமை தாங்கக்கூடிய சக்தி தமக்கு உண்டு என்பதனை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு தங்களைத் தவிர்க்கப்படவியலாத வலு மையங்களாகக் கட்டி எழுப்பாதவரை,இந்தியா மட்டுமல்ல,ஐநா மட்டுமல்ல,அமெரிக்கா மட்டுமல்ல,ஏன் அவர்களுடைய சொந்தத் தமிழ் மக்களே அவர்களை எதிர்பார்ப்போடு பார்க்கப் போவதில்லை.