இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்களை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தியே இந்திய தேசம் இவ்வளவு காலமும் தங்களுடைய நலன்களுக்காக செயல்பட்டு இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஜே.வி.பியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த காலங்களிலே தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருந்த அனுரகுமார திசாநாயக்கவை இந்திய அரசாங்கம் அழைத்திருக்கிறது.
இந்த அழைப்பு பொதுவான பார்வையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது.
இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்களை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி இந்திய தேசம் இவ்வளவு காலமும் தங்களுடைய நலன்களுக்காக செயல்பட்டு இருக்கின்றது.
அதைவிட மேலாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பை அன்றைய காலங்களிலே ஜே.வி.பியுடன் இருந்த அனுரகுமார திசாநாயக்க தலைமையிலே குழுவினர் வழக்கினைத் தாக்கல் செய்து அந்த வடக்கு – கிழக்கு இணைப்பைப் பிரிப்பதற்கு முயற்சித்திருந்தார்கள்.
அவ்வாறான ஒரு நிலையில் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான ஒரு செயற்பாட்டைச் செய்திருந்தும் கூட இன்று ஜே.வி.பியில் இருந்து தற்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவராக இருக்கின்ற அநுகுமார திசாநாயக்கவை அழைத்துப் பேசியிருப்பது என்பது தமிழ் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளிக்கின்றது.
தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வினை எடுக்காது மாறாக அனுரகுமார திசாநாயக்கவையும் அவரோடு சேர்ந்த குழுக்களையும் அழைத்துச் சந்தித்திருப்பது உண்மையிலேயே கவலை அளிக்கின்றது.
இந்த விடயம் இந்தியாவைப் பொறுத்தமட்டில் தன்னுடைய பிராந்திய நலன்களை மாத்திரம் கருத்தில் கொண்டு இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் மீது ஒரு துளி அளவும் கூட ஒரு அக்கறை இல்லாத நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கின்றது “என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.