நாட்டில் சமூக ஊடகங்கள் ஊடாக திட்டமிட்டு பொய்யான செய்திகளை பரப்புகின்ற அனைவரும், இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் இருந்து தப்பமுடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரித்துள்ளார்.
இன்று பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இணையவழி பாதுகாப்புச் சட்டம் இந்த நாட்டிற்கு அத்தியாவசியமானது. சட்டவிரோதச் செயல்களை செய்து வெறுப்பை விதைப்பவர்கள் அதிலிருந்து தப்ப முடியாது.
இந்த சட்டம் நாட்டில் இல்லாவிட்டால் சமூக ஊடகங்கள் மூலமாக மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குவார்கள்.
இந்த சட்டம் இல்லாவிட்டால் நம்பமுடியாத பொய்யான செய்திகளை நாட்டிற்கு தெரிவிப்பார்கள். ஆபாச விடயங்களை தடையின்றி வெளிப்படுத்துவார்கள்.
இவ்வாறான செயல்களினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றை நாங்கள் தனிப்பட்ட முறையிலும் அனுபவித்திருக்கிறோம்.
பாடசாலை அதிபர்கள் சந்திப்புக்களின் போது இந்த சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு அதிபர்கள் எங்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த இழையவழி பாதுகாப்பு சட்டம் நாட்டின் மீது பொறுப்புள்ள எவரையும் பாதிக்காது. அவர்களால் இன்னும் சிறப்பாகவும் வலுவாகவும் செயற்படமுடியும்.
அரசியல்வாதி தவறு செய்தால் அதை அச்சமின்றி கூறலாம், நீதிமன்றத்திற்கு கூட செல்லலாம்,
அரசியல்வாதி மீது நடவடிக்கை எடுக்கலாம். எனவே இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆனால் ஆபாச வீடியோ பதிவேற்றுபவர்கள் கூடாத விடயங்களை எழுதுபவர்கள், பொய்களை பேசி மக்கள் மீது வெறுப்பை விதைப்பவர்கள் இந்த சட்டத்தில் இருந்து தப்பமுடியாது” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.