‘யுக்திய’ விசேட நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடுவல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், ஏறக்குறைய 100 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை அதன் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
விசாரணைக்காக வாகனங்களை மேலும் தடுத்து வைக்க பொலிஸார் விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார்.
வழக்கு விசாரணையின் போது, மேற்படி சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் முறையான உத்தரவுகள் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளன. இந்நிலையில் கடுவல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடக்கம் பொலிஸாரால் ‘யுக்திய’ விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.